விஜய் சேதுபதி தற்போது இந்தியளவு பிரபலமான நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் கச்சிதமாக கொடுப்பவர் விஜய் சேதுபதி இதனாலே தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடிப்பதில் பிஸியாக உள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் இந்தி தொடரான ‘ ஃபர்ஸி’ வரும் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைமில் வெளிவரவிருகின்றது. இந்த தொடரின் கதாநாயகனாக பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் நடிக்கிறார். இவருடன் ராஷி கண்ணா, கே.கே.மேனன் , ரெஜினா கேசேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரபல ‘ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குனர்களான டிகே மற்றும் ராஜ் இந்த தொடரை இயக்குகின்றனர். ‘எட்டு எபிசோடுகளைக் கொண்ட ஃபர்ஸி தொடரின் டிரைலர் இந்திய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பதால் தமிழில் ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சட்ட விரோதமாக ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் குழுவினரை பிடிக்க மிரட்டலான அதிகாரியாக வருகிறார் விஜய் சேதுபதி. ஒரு திருடன் போலீஸ் கதையை திரைக்கதையை கொண்ட தொடராக வெளிவரவிருக்கும் ஃபர்ஸி தொடரின் விளம்பர பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் ஃபர்ஸி குழு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதில் விஜய் சேதுபதியிடம் வெப்சீரிஸில் நிறைய இரத்தம் , கெட்ட வார்த்தை, ஆபாச காட்சிகள் இடம்பெறும். நீங்கள் பொதுவாக அதுபோல படம் நடித்ததில்லை, இந்த வெப் சீரிஸில் அதுபோன்று உள்ளதா? அதுக்காக எதனா சமரசம் செய்துள்ளீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு விஜய் சேதுபதி “அதுபோன்று இந்த சீரிஸ் இல்லை. அந்த விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். ஏனென்றால் பெரும்பாலும் என் குழந்தைகளுடன் நான் பார்க்கிற படங்களை தான் நான் கொடுக்கனும் னு நினைப்பேன். அதை மீறி கதையில் எதாவது நடந்திருந்தால் கண்டிப்பாக படம் 'A' போட்டு தான் வரும்.." என்றார்.

மேலும் அவரை தொடர்ந்து ஃபர்ஸி தொடரின் கதாநாயகனான ஷாகித் கபூரிடம் விஜய் சேதுபதியின் படங்களை இந்தி ரீமேக்கில் நடிக்க விருந்தால் எந்த படத்தில் நடிப்பீர்கள் என்ற‌ கேள்விக்கு, அவர், "நான் நிச்சயமா நடிக்க மாட்டேன். எனக்கு தெரியும் எது செய்யனும் எது செய்யக்கூடாதுனு.. நான் அப்படி செய்தால் எனக்கு கல்லடி தான் கிடைக்கும். விஜய் சேதுபதி சார் என்ன பன்னாலும் நான் அவரை பின் தொடர்பவனாய் இருப்பேன்" என்றார்.

அதன் பின் ஓடிடி ஏன் வசூல் அறிவிப்பை கொடுப்பதில்லை.. இது பிரபலத்தின் மார்கெட்டில் இறக்கத்தை கொடுக்காதா? தொடர் வெற்றி பெற்றதா என்பதை எதன் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும் என்று இயக்குனரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் டி.கே அவர்கள், “ஓடிடி பொறுத்தவரை இதுவரை யாரும் சொன்னதில்லை, வெளிநாடுகளில் இதுகுறித்து அறிவித்திருக்கின்றனர். ஆனால் இங்கு இல்லை. ஓடிடியில் வெற்றி பெற்றதா என்பதை நீங்கள் பொதுவெளியிலே தெரிந்து கொள்ளலாம். மக்களின் விமர்சனங்கள், மீம்ஸ்கள், வரவேற்பை பொறுத்து வெற்றியா? தோல்வியா? என்று தெரிந்துவிடும். எனக்கு பேமிலி மேனுக்கு கிடைத்த வரவேற்பு அப்படிதான் தெரிந்து கொண்டேன்” என்று குறிப்பிட்டார்.