தளபதி விஜய் நடிப்பில் பரபரப்பாக தயாராகி வரும் லியோ திரைப்படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே வெளியிட்ட ஒரு வீடியோவை தற்போது இயக்குனர் ரத்னகுமார் பகிர்ந்து இருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்த தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். முன்னதாக தொடர்ந்து 50 நாட்கள் காஸ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று லியோ திரைப்படத்தின் ஸ்பெஷல் பரிசு ஒன்று ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில் நாளை ஜூன் 22 ஆம் தேதி லீவு திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளிவர இருக்கிறது தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். முன்னதாக லியோ திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் வெளிவராமல் மிகவும் கவனமாக படக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னால் பல்வேறு விதமான பெயர்கள் உலா வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் லியோ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 அக்டோபர் மாதத்திலேயே லியோ திரைப்படத்தின் டைட்டிலை இயக்குனர் ரத்னகுமார் மூணாறில் உள்ள எக்கோ பாயிண்டில் நின்று தளபதி விஜயின் ரசிகனாக லியோ என கத்திய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே லியோ திரைப்படத்தின் டைட்டிலை வெளியிட்டோம் என குறிப்பிட்ட இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோ இதோ…