மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக மிரட்டலான அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக, தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்றாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தளபதி விஜய் லியோ திரைப்படம் தற்போது வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவிற்கு அதிக நம்பகத்தன்மையுடன் விஷுவல் ட்ரீட்டாக அமைந்த கழுதைப்புலி சண்டை காட்சி ரசிகர்களுக்கு மிரள வைக்கும் சினிமா அனுபவத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் இந்திய சினிமாவில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படமாக 148.75 கோடி வசூலித்து இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்த படமாக முதல் 7 நாட்களில் 461 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ஒருபுறம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக லியோ திரைப்படத்தின் 2வது பாதி நிறைய எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் நேற்று அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அந்த வகையில், "தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் தவறானது என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என கேட்டபோது, “நான் ஏற்கனவே நிறைய தடவை சொல்லி இருக்கிறேன் அல்லவா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை அது தயாரிப்பாளருடையது. மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான்... தியேட்டர் ரெஸ்பான்ஸ் பார்த்தேன் எல்லோருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார்கள் படத்தின் இரண்டாவது பாதியில் கொஞ்சம் தொய்வு இருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்கிறது அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என பதிலளித்து இருக்கிறார். லியோ படத்தின் எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய அந்த வீடியோ இதோ...