வருகிற 2024 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி உலகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படத்தின் கடினமான படப்பிடிப்பு அனுபவங்களை இன்று நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சீயான் விக்ரம் பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில்,

"இதை ஏதோ ஒரு இடத்தில் செட்டு போட்டு நாங்கள் எடுக்கவில்லை. கே ஜி எஃப்-ல் அங்க போய் நாங்கள் இருந்தோம். அதே இடத்தில் இரவில் அவ்வளவு குளிராக இருக்கும், பகலில் அவ்வளவு சூடாக இருக்கும். திடீரென ரஞ்சித் "டேய் மூன்று தேள் கொண்டு வா" என்று சொல்வார். பத்து நிமிடத்தில் தேள் வந்து விடும். ஏனென்றால் எந்த கல்லை எடுத்தாலும் அங்கே தேள் இருக்கும். “டேய் ஒரு பாம்பு கொண்டு வா” என்றால் உடனே அடுத்த நிமிடத்தில் வந்து விடும். எங்கு பார்த்தாலும் கட்டுவிரியன் அது இது என்று அவ்வளவு பாம்புகள் இருக்கும். நாங்கள் எல்லாம் செருப்பு இல்லாமல் எங்கு நடந்தாலும் பார்த்து பார்த்து நடந்தோம். அந்த மாதிரி ஒரு இடம். அந்த இடத்தில் அவர்களுடைய வாழ்க்கை… அங்கு போய் நடிக்கும்போது... ஒவ்வொரு படமும் ஸ்பெஷல் தான் ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது இந்த மாதிரி ஒரு அனுபவம் சில நேரங்களில் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இது நிஜமாகவே அவர்களுடைய வாழ்க்கை தான். மேக்கப் சில நேரங்களில் 4 மணி நேரம் 5 மணி நேரங்கள் எல்லாம் ஆகியிருக்கிறது. விடியற்காலையில் 4 மணி 5 மணி ஆரம்பித்தது என்றால் இரவு 11 மணி 12 மணி வரையில் போகும் சில நேரங்களில் இரவு படப்பிடிப்பும் போகும். அதன் பிறகு அந்த லொகேஷன் போன பின் அந்தக் கோவணம், செருப்பு இல்லாமல், நாங்கள் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவோம். எனவே எந்த இடத்திலும் ரிலாக்ஸ் பண்ண முடியாது. முன்பெல்லாம் ஒரு சீனில் என்னுடைய காட்சி முடிந்தால் மற்றவர்களுக்கு CLOSE-UP இருக்கும் நான் பின்னாடி போய் உட்கார்ந்து போன் பார்ப்பேன் ஆனால் இங்கு அதற்கெல்லாம் வாய்பே கிடையாது. அங்கே போய் நின்றோமா அடுத்தது உணவு இடைவேளை தான். சில நேரங்களில் அதுவும் இருக்காது. மேக்கப் 3 மணி நேரம் 4 மணி நேரம் போட்டு அந்த இடத்திற்கு போனால் அங்கே பயங்கரமாக குளிரும். வெறும் ஒரு கோவணம் மட்டும் தான் கட்டியிருப்போம். நன்றாக சகதியை எடுத்து உடல் முழுக்க பூசுவார்கள். மிகவும் சில்லென இருக்க கூடிய சகதியை எடுத்து உடல் முழுக்க பூசுவார்கள். ரஞ்சித் மட்டும் பாவம் எங்களுக்காக அவரும் கோவணத்தில் தான் இருந்தார் ஷூட்டிங் முழுக்க... பகலில் அதே சமயம் மிகவும் சூடாக இருக்கும். அந்த இடத்தில் ஓய்வெடுப்பதற்கு நாற்காலியோ நிழலோ கிடையாது. அப்படியே பாறை மீது இருக்க வேண்டியதுதான். இப்படிதான் இருந்தது ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடியும்போது ரஞ்சித்திடம் சொல்லுவேன் "போதுமடா சாமி" என்று.. அப்படி தான் இருக்கும். ஆனால் அடுத்த நாள் காலை, "ரெடி ஆகலாம்" என ஒரு பெரிய உற்சாகம் இருக்கும். இந்த மாதிரி இதற்கு முன்பு நான் உணர்ந்ததே கிடையாது. எனக்கு அப்படி ஒரு இன்பமான அனுபவம்."

என தெரிவித்திருக்கிறார். அந்த ஸ்பெஷல் வீடியோ இதோ…