ஜப்பான் 2வது பாடல்: தீபாவளி ரிலீஸாக வரும் கார்த்தியின் மாஸ் என்டர்டெய்னர் படத்தின் மனதை மயக்கும் மெலடியாக "சொட்டாங்கல்லா" பாடல் இதோ!

கார்த்தியின் ஜப்பான் பட சொட்டாங்கல்லா பாடல் வெளியீடு,karthi in japan movie 2nd single sottangalla song out now | Galatta

நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக சொட்டாங்கல்லா பாடல் வெளிவந்துள்ளது. முன்னதாக ஜப்பான் படத்தின் முதல் பாடலாக வந்த “டச்சிங் டச்சிங்” பாடல் கலக்கலான ஒரு பாடலாக கவர்ந்த நிலையில் தற்போது மனதை மயக்கும் மெலடி பாடலாக “சொட்டாங்கல்லா” என்னும் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் கார்த்தியின் 25வது திரைப்படமாக வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். ஜிவி பிரகாஷ் குமார் அவர்களின் இசையில் இந்த “சொட்டாங்கல்லா” பாடலை பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். கவிஞர் யுகபாரதி இந்த பாடலை எழுதியிருக்கிறார். 

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய நகைக்கடை ஒன்றில் நடைபெறும் திருட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக கார்த்தியின் திரைப்பயணத்திலேயே வித்தியாசமான திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்த அதிரடியான படங்கள் தயாராகி வருகின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் தனது 26 ஆவது திரைப்படமாக உருவாகும் #கார்த்தி26 திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அவரது 27 வது படமான கார்த்தி 27 திரைப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் எழுதி இயக்குகிறார். கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் #கார்த்தி27 படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். 

இந்த வரிசையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தலைவர் 171 படத்தில் இணைவதால் அதன் பிறகு கைதி 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன்பு வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் 2வது பாடலான "சொட்டாங்கல்லா" பாடல் இதோ…