"டைட்டானிக் மாதிரி.." தங்கலான் என்ன மாதிரியான படம்?- டீசர் வெளியீட்டு விழாவில் சீயான் விக்ரம் பேசிய வைரல் வீடியோ இதோ!

தங்கலான் படம் பற்றி டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சீயான் விக்ரம்,chiyaan vikram compares titanic and thangalaan at teaser launch | Galatta

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் எந்த மாதிரியான படம் என டைட்டானிக் படத்தை குறிப்பிட்டு நடிகர் சீயான் விக்ரம் பேசியிருக்கிறார். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தங்கலான் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இன்று நவம்பர் 1ம் தேதி வெளிவந்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று நடைபெற்ற இந்த தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிய சீயான் விக்ரம் தங்கலான் திரைப்படத்தை டைட்டானிக் படத்துடன் ஒப்பிட்டு என்ன மாதிரியான படமாக இருக்கும் என விவரித்தார். அப்படி பேசும்போது,

"நம் சமுதாயத்தில் நமது இந்தியாவில் நடந்த நிறைய நல்ல விஷயங்களும் இருக்கின்றன நிறைய கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. நமக்கு ஆங்கிலேயர்கள் குறித்த விஷயங்கள் தான் தெரியுமே தவிர சில விஷயங்கள் அப்படியே போகப்போக நாமே மறந்து விடுகிறோம். இப்போது இருக்கக்கூடிய தலைமுறைக்கு அது தெரியுமா என்று கூட எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றி நாம் சித்தரிக்கும் போது யோசிக்கும் போது அது நிச்சயமாக ஒரு பாடமாகத்தான் படமாக இருக்கும். ஆனால் இந்த படம், டீசர் பார்த்தீர்கள்.. அதிலிருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும். இது வெறும் கடுமையான ஒரு சோகம் அந்த மாதிரியான விஷயங்கள் மட்டும் இல்லாமல் எல்லா விஷயங்களும் இருக்கும். எனக்கு இந்த படத்தில் பிடித்த விஷயம் என்னவென்றால் டைட்டானிக் படத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் காதல் தான் அதனுடைய கதை. ஆனால் அந்தக் கப்பலை வைத்து அந்த டைட்டானிக் என்ற கப்பலை பின்னணியாக வைத்துக்கொண்டு, அந்தக் காதலை எப்படி சித்தரித்தார்கள் என்பது தான் அந்த படத்தினுடைய வலு. அது மாதிரி இந்த படத்தில் அந்த காலகட்டத்தில் இவர்கள் எப்படி இருந்தார்கள் இந்த சமுதாயம் எப்படி இருந்தது என்ற ஒரு விஷயம் எந்த ஒரு காட்சியிலும் இல்லாமல் இருக்காது. ஆனால் அதற்காக எந்த ஒரு காட்சியிலும் நாம் நெஞ்சை கசக்கி கொண்டு அழ வைக்க வேண்டும் என்பது போல் இல்லாமல், இது வந்து எதார்த்தம் இது உண்மை இது நடந்து கொண்டிருந்தது. இப்போது நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் இது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நினைத்திருப்போம். ஆனால் அவர்கள் பிறந்தது அப்படி தான் வாழ்ந்தது அப்படிதான். அது அவர்களுக்கு கஷ்டமாக இருருக்காது. நாளை ஏதோ ஒரு மாற்றம் நடக்கும் என்ற ஒரு காத்திருப்பு இருக்கும் ஆனாலும் அதற்குள் அவர்களுக்கு இன்பங்கள் இருக்கும் துன்பங்கள் இருக்கும் சந்தோஷம் இருக்கும் காதல் இருக்கும் அதுதான் இந்த படம்."

என தெரிவித்திருக்கிறார். இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் வகையில் வெளிவர இருக்கும் இந்த தங்கலான் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி உலகம் எங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. அதற்கான இறுதி கட்ட பணிகள் அனைத்தும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் தங்கலான் திரைப்படத்தில் பணியாற்றியது குறித்தும் திரைப்படம் குறித்தும் பல முக்கிய தகவல்களை தங்கலான் டீசர் வெளியிட்டு விழாவில் சீயான் விக்ரம் பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ...