தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் அவரது வாழ்க்கையை செய்தி துறையில் துவங்கினார். பின் சின்னத்துறை மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சையமாகி பிரபலமானார். அதன் பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்ன குமார் இயக்கத்தில் உருவான 'மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே பெரும் கவனம் பெற்ற ப்ரியா பவானி சங்கர். அவருகேன்ற தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம்', 'மான்ஸ்டர்' போன்ற பல்வேறு படங்களில் நடித்தார்.

தற்போது அவர் ‘பத்து தல’, ‘அகிலன்’, ‘டிமாண்டி காலனி’, ‘ருத்ரன்’ உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கவனிக்க கூடிய நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தற்போது நீண்ட நாள் கனவான உணவகம் திறப்பதை கையிலெடுத்து முடித்துள்ளார். நடிகையாக தன் வாழ்கை தொடர்ந்து கொண்டிருக்கும் அவர் தற்போது புதிய உணவகம் தொடங்கி தனது வாழ்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறி தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உணவகம் தொடர்பான சிறப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் "எங்களது சொந்த உணவகம்.. எப்போதும் இதுதான் எங்களது கனவாக இருந்தது. இந்த நாளை நெருங்குகையில் மிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. நாங்கள் எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பரிமாற காத்திருக்கிறேன். லியாம் டைனர் - விரைவில் சேவை தொடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

லைம் டைனர் என்ற பெயருடன் உணவகத்தின் இலச்சினையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருப்பவர் ஒரு கட்டத்தில் அதே துறையில் வேறு ஒரு பரிணாமம் எடுப்பது வழக்கம். இயக்குனர் நடிகராவதும் நடிகர் இயக்குனராவதுமாய். இதுவே ரசிகர்கள் பல நாட்களாக தெரிந்து வந்தது, வெகு சிலரே வேறு ஒரு துறையை தெரிந்தெடுத்து நகர்வார். முன்னதாக நடிகர் சூரி மதுரையில் அய்யன் & அம்மன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை திறந்து கவனம் பெற்றார், சூரி உணவகம் தற்போது மதுரையில் வெகு விமர்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பிரியா பாவானி சங்கரும் இணைந்துள்ளார். விரைவில் அவரது புதிய உணவகம் குறித்த விவரங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.