நடிகர் விஜய் நடிப்பில் குடும்ப படமாக வெளிவரவிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். ஏற்கனவே வரவேற்பை பெற்றநிலையில் டிரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மற்றும் எச்.வினோத் , அஜித் குமார் கூட்டணியில் இணைந்த திரைப்படம் ‘துணிவு’.

அதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான துணிவு படத்தின் டிரைலர் அமோக்ஹா வரவேற்பை பெற்றது. அஜித் விஜய் திரைப்படங்கள் தற்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே நேரத்தில் ஜனவரி 11 வெளியிடவிருக்கின்றனர். இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உயர்த்தியது. அஜித் விஜய் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் வாடிக்கை சமீப காலமாக நிகழ்வதில்லை இது 90 களிலே தொடங்கியது. இருவர் நடித்து ஒரே சமயத்தில் வெளியான படங்களின் பட்டியல் என்னென்ன ? அந்த படங்களின் விவரங்களை பற்றி குறிப்பிடுகிறது இந்த கட்டுரை..

1996 ல் அஜித்தின் வான்மதி படமும் விஜய் நடிப்பில் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் பொங்கல் பண்டிகையில் ஒரே நேரத்தில் வெளியானது. இருபடங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் படம் வணிக ரீதியாக நல்ல வசூலை குவித்தது. அஜித் படமும் எந்தளவும் சளைக்காமல் 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியடைந்தது.

அதே ஆண்டில் அஜித், பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் ‘கல்லூரி வாசல்’ சரியாக போகவில்லை. அதே நாளில் வெளிவந்த விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் ‘பூவே உனக்காக’ 250 நாட்கள் திரையில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. விஜய் திரைப்பயனத்தில் இன்றும் பூவே உனக்காக ஒரு மைல்கல் எனலாம்.

அதன் பின் 1997 ஆண்டில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ மற்றும் ஏ.ஆர் ரகுமான் இசையில் அரவிந்த் சாமி, பிரபு தேவா நடித்த ‘மின்சார கனவு’ வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகள் கொண்ட இந்த படங்களின் வெளியீட்டில் குடும்பங்களை கவர்ந்து மாட்டாமல் தப்பித்தது விஜயின் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’. ஆனால் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘நேசம்’ படுதோல்வி ஏற்பட்டு நஷ்டத்தை கொடுத்தது.

அந்த ஆண்டின் இறுதியில் வெளியான விஜயின் ‘காதலுக்கு மரியாதை’ இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட 150 நாட்கள் ஓடியது. அதில் ‘என்னை தாலாட்ட வருவாளா’ என்ற பாடல் விஜயை ரசிக்க ஒரு கூட்டமே உருவானது. ஆனால் விஜய் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஒரு வார இடைவெளியில் வெளியான அஜித்தின் ‘ரெட்டை ஜடை வயசு’ படத்திற்கு கிடைக்கவில்லை.

பின் 1999 ல் இயக்குனர் எழில் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் விஜய் நடிப்பில் வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு மெகா ஹிட் திரைப்படம். இது 150 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது குறிபிடத்தக்கது. மற்றும் அஜித் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘உன்னை தேடி’ திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தமுறை இருவரும் வெற்றி பெற்றனர்.

அடுத்த ஆண்டே விஜய் நடிப்பில் நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான படம் ‘குஷி.முன்னதாக அஜித்தை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தான் இந்த படத்தையும் இயக்கினார். படம் புத்துணர்வுடன் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. துள்ளலான தேவாவின் பாடல்கள் இன்றும் எல்லோருக்கும் favourite. அஜித் நடிப்பில் வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ படம் குஷி படத்தின் வெற்றியின் தாக்கம் இதன் மீது விழ அஜித் படம் பெரியளவு எடுபடவில்லை.

2001 ம் ஆண்டில் விஜய் சூர்யா நடிப்பில் உருவான பாம் ‘பிரண்ட்ஸ்’ மற்றும் அஜித் நடிப்பில் வெளியான தீனா இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இரண்டு படங்களும் வித்யாசமான உணர்வை மக்களுக்கு அளித்தது மட்டுமல்லாமல் ஒருசேர கொண்டாடகூடிய படமாக இருந்தது. அஜித்தின் திரைப்பயனத்தை மாற்றியமைத்த படமாக தீனா இருந்தது. அதுவரை காதல் மன்னனாக இருந்த அஜித் அதிரடி ஹீரோ வாக மாறியது இந்த படத்தில் தான். அன்றிலிருந்தே இரு தரப்பு ரசிகர் மன்றங்களின் சலசலப்பு தொடங்கியது.

2002 ம் ஆண்டில் வெளிவந்த பகவதி - வில்லன் , முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாம் பாதியில் அக்ஷன் ஹீரோவாகவும் நடித்த விஜயின் பகவதி அதிகளவு பேசப்பட்டது அதே நேரத்தில் ராபின் ஹுட் பாத்திரமாய் இரண்டு வேடங்களில் வெளியான ‘வில்லன்’படத்தில் அஜித் அசத்திருப்பார்.

அதன்பின் 2003 ல் அஜித் திரைப்பயணத்தில் பெரும் அடியாய் விழுந்தது அவரது நடிப்பில் அந்த ஆஞ்சநேயா. ஆனால் விஜயின் திருமலை வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இருந்தும் ரசிகர்களிடமிருந்து இரண்டு படங்களுக்கும் விமர்சங்கள் எழுந்தது. தொடர் தோல்வியில் அடுத்த அடியாக அஜித்தின் பரமசிவன் படம் 2006 ல் விழுந்தது. படம் பெரும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. அந்த படத்திற்கு சளைத்ததில்லை என்ற வகையில் விஜயின் ஆதி அமைந்தது. இருவருக்கும் படுதோல்வியை கொடுத்தது அந்த வருடம் .இந்த மோதலில் இரண்டு ரசிகர்களும் பெரிதாக பாதிக்கவில்லை இரண்டு தரப்பிலும் சமமாக அடி விழுந்தது என்றே குறிப்பிடலாம்.

2007 பொங்கலுக்கு பிரபு தேவா இயக்கத்தில் புதிய உடல் தோரணையில் களம் இறங்கினார் விஜய். அவர் நடித்த போக்கிரி பட்டி தொட்டி எங்கிலும் மெகா ஹிட்டடித்தது.ஆனால் அதே பொங்கலில் வெளியான அஜித் நடித்த ஆழ்வார்க்கு அது வாய்க்கவில்லை. மக்களிடம் போக்கிரி பேசப்பட்டதால் ஆழ்வார் எடுபடாமல் போனது.

அதன் பின் மிகப்பெரிய சாம்ராஜ்த்தை இருவரும் உருவாக்கி ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதற்கேற்ப வசூலை குவிக்க தொடங்கினார். பின் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் வீரம் – ஜில்லா இரண்டு படங்களும் பொங்கல் நாளை சிறப்பாக்கியது. தொடர் ஓட்டத்தை இரண்டு படங்களும் கண்டு 100 நாட்களை எட்டியது.

ஆரம்பத்தில் இருவருக்கும் இருந்த எதிர்ப்பார்ப்புகளை காட்டிலும் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் துணிவு வாரிசு படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. வீரம் - ஜில்லா படங்களுக்கு பின் இருவரும் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இன்று பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டுகளாக இருவரும் இருந்து வருகின்றனர். இருதரப்பினரிடமும் ஒரே அளவிலான எதிர்பார்ப்புகளுடன் வெளிவரவிருக்கும் விஜயின் வாரிசு அஜித்தின் துணிவு படத்தின் நிலவரம் படம் வெளியான பின்பே தெரிய வரும். நிச்சயம் இரண்டு படங்களும் ஒரே மாதிரியான உற்சாகத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகம் இல்லை.