துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 9வது நாளாக நீடித்து வருகிறது. இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர்.

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை. ஆனால், அந்த மாணவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக போலந்தின் ரிசோ விமான நிலையத்தில் பேட்டியளித்த மத்திய மந்திரி வி.கே.சிங், கூறியதாவது: கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்க முடியாது. துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசியமோ தெரியாது. கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும்1700 மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” என தெரிவித்தார்.

மேலும் ஏற்கெனவே கார்கிவில் உணவு வாங்கச் சென்ற போது ரஷிய குண்டுக்கு கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா இரையாகினார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மேலும் ஒரு இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோட், இந்தியா டுடே டிவியிடம், மூன்று நான்கு பேர் எங்களை நோக்கி சுட்டனர். இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.