உக்ரைன் ரஷ்யா போரால் அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின்கள் வழங்குவதை நிறுத்த ரஷியா முடிவு செய்துள்ளது.

Space Engine

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

russia ukraine war

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் ஆத்திரத்தில் உள்ளன. இந்த போரை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி வரும் அந்த நாடுகள், இதை ஏற்காத ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் ரஷியா மீதும் அதன் அதிபர் விளாடிமிர் புதின் மீதும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சர்வதேச பரிமாற்றங்களுக்கான ‘ஸ்விப்ட்’ கூட்டமைப்பில் இருந்து ரஷிய வங்கிகளையும் நீக்கி உள்ளன.

அதனைத்தொடர்ந்து பொருளாதார தடைகளையும், தண்டனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த வரிசையில் மிக முக்கியமாக, அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்து உள்ளார்.

மேலும் இது குறித்து டி.வி. பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ‘இன்று, எனர்கோமாஷ் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சங்கத்தின் உற்பத்தியை (ராக்கெட் என்ஜின்கள்) அமெரிக்காவுக்கு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். 1990-களின் நடுப்பகுதியில் இருந்து, இந்த வினியோகம் சுறுசுறுப்பாக இருந்ததை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். முதலில் இது ஆர்.டி.180 எந்திரங்கள் ஆகும்’ என்று தெரிவித்தார்.

இதைப்போல அமெரிக்காவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 24 என்ஜின்களின் பராமரிப்பு பணிகளையும் ரஷியா நிறுத்துவதாக கூறிய டிமிட்ரி ரோகோசின், ரஷியா மீது மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் அடிப்படையில், ரஷியாவின் ராக்கெட் மற்றும் விண்வெளித் திட்டம் சரிசெய்யப்படும் என்றும் கூறினார். ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் நலன்களுக்காக இரட்டை பயன்பாட்டு செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்தார்.