யூ-டியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரித்து லோகநாதன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வமுடையவர் என்று கூறப்படுகிறது. இவருக்கும் கோமதி (28) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இதையடுத்து கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு கடந்த 13 ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர்.

மருத்துவர்கள் தேதி குறித்த நாளில் பிரசவ வலி ஏற்படமால் தள்ளிப்போன நிலையில் கடந்த 18 ஆம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வலரான லோகநாதன் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க நினைத்துள்ளார்.

இதையடுத்து லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் சமூகவலைத்தளமான யூ-டியூபை பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் கோமதிக்கு பிரசவமானது.

ஆனால் மனைவியின் வயிற்றிலிருந்த பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பிரசவம் ஆன நிலையில் தொடர்ந்து கோமதிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் தனது மனைவி கோமதியுடன், இறந்த ஆண் குழந்தையையும் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு லோகநாதன் அழைத்து சென்றுள்ளார். அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கோமதிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் லோகநாதனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை முடிவில் லோகநாதனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
யூ-டியூப்பை பார்த்து பிரசவம் செய்வது குற்றம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அதனை செய்தல் என்பது தொடர்பாக லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வீட்டில் பிரசவம் பார்க்க உதவிய லோகநாதன் அக்கா கீதாவிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்திருந்தார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரக்கோணம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யூ-டியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தொடங்கினால், முதல் மாநிலமாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

வரும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கவனத்துடன் விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் யூ-டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை. இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.