கொரோனா வைரஸ் எதிரொலியாகத் திருமண நிகழ்வு ஒன்றில் புதுமண தம்பதிகள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்துகொண்டு சடங்குகளைச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், கல்வி நிறுவனங்கள், சுற்றுலா தளங்கள் மால்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கனவே திட்டமிட்ட சுப நிகழ்வுகள் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்றும், புதிதாக எந்த சுப நிகழ்வும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது என்றும் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே முடிவு செய்த திருமணம் ஒன்று, ஆந்திராவில் இன்று முறைப்படி உறவுகள் சூழ நடைபெற்றது.

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள உங்குட்டூர் பகுதியில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் சடங்கு நிகழ்ச்சிகளின் போதும், தாலி கட்டும்போதும், புதுமண தம்பதிகள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

மாஸ்க் அணிந்துகொண்டு தான், மந்திரமும் ஓதப்பட்டது. அதேபோல், திருமண விழாவிற்கு வருகை தந்த புதுமண தம்பதிகளின் உறவினர்கள் கூட, மாஸ்க் அணிந்துகொண்டு தான், மண மக்களை வாழ்த்தினர்.

கொரோனா வைரஸ் நோயிலிருந்து விடுபட, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த திருமண நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இணைய வாசிகள் பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.