கடத்தப்பட்ட என் காதல் மனைவியை மீட்டு தரும்படி, பாதிக்கப்பட்ட கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

ஈரோடு மாவட்டம் காவலிபாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ஆயிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரகுபதி மகள் மெளனிகாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், இருவரின் காதலுக்கும் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, நவநீதகிருஷ்ணன் - மெளனிகா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர், இருவரும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

அதன்படி, இருவீட்டார் பெற்றோரையும் அழைத்துப் பேசிய போலீசார், சமாதானம் பேசி இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிவிட்டு, அனுப்பி வைத்தனர்.

Man seeks collectors help to rescue his wife

இதனிடையே, கடந்த 9 ஆம் தேதி, மௌனிகாவின் தந்தை ரகுபதி உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெருந்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரது உறவினர் போன் மூலம் கூறியுள்ளார்.

இதனை நம்பி, நவநீதகிருஷ்ணன் - மெளனிகா தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது, வழியிலேயே மெளனிகாவின் தந்தை ரகுபதி மற்றும் அவரது உறவினர்கள், நவநீதகிருஷ்ணனை கடுமையாகத் தாக்கிவிட்டு, மெளனிகாவை கடத்தி சென்றுள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நவநீதகிருஷ்ணன், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடத்தப்பட்ட தன் மனைவி மெளனிகாவை மீட்டுத் தரக்கோரி, பாதிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.