கொரோனா பீதியால்.. பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகளை மூடவும், டாஸ்மாக், திருமண நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

TN schools colleges malls shut down coronavirus

அதன்படி, 'வருமுன் காப்போம்' என்பதற்கு ஏற்ப, “அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், “தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு அரங்குகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TN schools colleges malls shut down coronavirus

“ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர, வேறு எந்த நிகழ்ச்சிகளும், திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது என்றும், புதிய நிகழ்ச்சிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை நடத்தக்கூடாது” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக, “அதிகமாக கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிக கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள்” ஆகிய நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் உள்ள மத்தியச் சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளைச் சந்திக்க 2 வாரங்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா அச்சுறுத்தலைச் சாதகமாக்கி முகக்கவசம், சானிடைசர், சோப்புகள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு உத்தரவை மீறி பள்ளி, வணிக வளாகங்கள் ஏதேனும் திறக்கப்பட்டால், நிரந்தரமாக சீல் வைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஆனால், தமிழக அரசின் இந்த எச்சரிக்கையை மீறி, ராசிபுரத்தில் 3 தனியார் பள்ளிகள், இன்று செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் குற்றம்சாட்டி உள்ளனர்.

TN schools colleges malls shut down coronavirus

இதனிடையே, கொரோனாவால் வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 19 ஆம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக, தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

TN schools colleges malls shut down coronavirus

இதனிடையே, சீனா, ஈரான், ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் திரும்பிய பயணிகள் 34 பேரை தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.