உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் வெகு விமரிசையாகக் குடமுழுக்கு விழா, தமிழில் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில், கடந்த 1 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, தினமும் நடைபெற்று வந்தன.

தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை மிகச் சரியாக 9.21 மணிக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் புதின நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.

முதலில் விநாயகர் கோயில் கோபுரத்திலும், பிறகு சுப்பிரமணியர் கோயில் கோபுரம், பெருவுடையார் கோயில் கோபுரம், பரிவார தெய்வங்கள் கோயில் கோபுரம் ஆகியவற்றிலும், இதையடுத்து ராஜகோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அப்போது, தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டன. இதனால், தஞ்சை பெரிய கோயிலில், தமிழ் மொழி ஓங்கி ஒலித்தது. இதனைக் கேட்பதற்காக, அங்கே பிரத்தியேகமாக ஒலிபெருக்கிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புனித நீர் ஊற்றப்பட்ட நிலையில், கோயில் கலசங்களுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, பரவசமடைந்த பக்தர்கள், “ஓம் நமச்சிவாய” என்னும் நாமம் கூறியது, விண்ணை முட்டும் அளவுக்கு சத்தம் எழுந்தது.

அதேபோல், முன்னதாக தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு, குடமுழுக்கு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால், கோயிலில் கூடியிருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் தமிழில் மொழியில் மந்திரங்களைக் கேட்டுப் பரவசப்பட்டனர்.

மேலும், இன்று மாலை 6 மணிக்கு பெரிய நாயகி உடனுறை மற்றும் பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோல், இரவு 8 மணிக்குப் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

கடைசியாக, 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் நடைபெற்றது. இதனைக் காண, பல லட்சம் மக்கள் தஞ்சை பெரிய கோயிலில் திரண்டிருந்தனர்.

பொதுமக்கள் வருகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன், தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், சுமார் 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.