இந்தியாவில் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போகும் மாநிலம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. 

“மனிதனை, மனிதனே அடித்து சாப்பிடும் காலம் வரும் என்றான் அறிஞன் ஒருவன்!” அது தான், இன்று இந்த சமூகத்தில் நடக்கிறதோ என்ற ஐயம், இந்த புள்ளி விபரங்களைப் பார்த்ததும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

Top 3 places where Women & Children get kidnapped

இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக, தேசிய குற்றப் பதிவு அலுவலகம் (என்.சி.ஆர்.பி) ஆய்வு ஒன்று நடத்தியது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா முழுவதும் காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பாகவும், இதில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பகுதிகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.  

அதன்படி, கடந்த 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமானோர் காணாமல்போன மாநிலங்களில் மராட்டியம், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

Top 3 places where Women & Children get kidnapped

மராட்டியத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும்,  28,316 பெண்கள் காணாமல் போயுள்ளனர். 2017 ஆம் ஆண்டில் 29,279 பேரும், 2018 ஆம் ஆண்டில் 33,964 பேரும் காணாமல் போயுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும், 24,937 பேரும், 2017 ஆம் ஆண்டில் 28,133 பேரும், 2018 ஆம் ஆண்டில் 31,299 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் 21,435 பெண்கள் காணாமல் போய் உள்ளனர். 2017 ஆம் ஆண்டில் 26,587 பேரும், 2018 ஆம் ஆண்டில் 29,761 பெண்களும் காணாமல் போய் உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 63,407 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். 2017 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் மொத்தம் 63,349 பேரும், 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 67,134 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்தியப்பிரதேச மாநிலத்தைக் காட்டிலும், மராட்டியம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 2 மாநிலங்களில் தான் அதிக அளவிலான குழந்தைகள் காணாமல் போய் உள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேசிய குற்றப் பதிவு அலுவலகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.