“தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா?” என்பது குறித்து தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா தொற்றின் பரவல் 2 வது அலையாகத் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வந்துகொண்டிருப்பதால், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, “தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என, தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது. ஆனால், அதே நேரத்தில் மேலும், ஒரு வார ஊரடங்கை நீட்டித்து விட்டு, சூழலைப் பொறுத்து முடிவு எடுக்கலாம் என்று, மற்றொரு தரப்பு பரிந்துரைத்து இருப்பதாகவும்” சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனை முடிந்துள்ள நிலையில், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் நடத்திய பிறகு ஆலோசனைக்குப் பிறகு? ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அப்போது முதலமைச்சர் கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனை முடிந்த பிறகு, அடுத்த சில நிமிடங்களிலேயே சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக” குறிப்பிட்டார்.

குறிப்பாக, “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதே தவிர, முழுமையான கட்டுக்குள் வரவில்லை” என்றும், அவர் வேதனை தெரிவித்தார்.

மேலும், “பொது மக்களின் பாதுகாப்பிற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இது விடுமுறைக்காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை பொது மக்கள் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என்றும், முதலமைச்சர் தனது வேதனையைப் பதிவு செய்தார்.

இதன் காரணமாக, “தமிழகத்தில், தளர்வுகள் அற்ற ஊரடங்கு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவினர், தங்களது கருத்துக்களைச் சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், உங்கள் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, இது தொடர்பாக முக்கிய முடிவு எடுத்து, பிற்பகலுக்குள் அறிவிக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது, இது தொடர்பாக சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.