கூடைப்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் கோப் பிரையண்ட், தனது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

கூடைப்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் கோப் பிரையண்ட். 41 வயதான கோப் பிரையண்ட், அமெரிக்கா கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர், இதுவரை 5 முறை என்.பி.ஏ.சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர்.

குறிப்பாக, கடந்த 2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதில், முக்கிய பங்காற்றியவர் கோப் பிரையண்ட்.

தனது அபாரமான விளையாட்டால், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரயண்ட், அதிக சம்பளம் வாங்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்வதாக போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டது.

அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு, விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், விளம்பர தூதராகச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற கூடைப் பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக, தனது 13 வயது மகள் கெயின்னா மற்றும் சிலருடன் ஹெலிகாப்டரில் பிரயண்ட் சென்றுள்ளார்.

அப்போது, ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து நொறுங்கி கடும் விபத்துக்குள்ளானது. இதில், பிரயண்ட், அவரது மகள் உள்பட பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோப் பிரயன்ட் உயிரிழந்த செய்தி, வெளியானதும், அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.