புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியின் ஏம்பல் என்ற கிராமத்தில் உள்ள மேலக்குடியிருப்பு பகுதியில், ஏழு வயதேயான குழந்தை ஜெயப்ரியா, தனது அண்டை வீட்டுக்காரர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். 57 வயதான இவர் தந்தை நாகூரான், வீட்டிலேயே நத்தை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். அவரின் மூன்றாவது மனைவியான செல்விக்கு இரண்டு குழந்தைகள். செல்வி மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தம்பதியின் மூத்த மகள்தான் ஜெயப்ரியா. ஜெயப்ரியா, ஏம்பல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஜூன் 30ம் தேதி காணாமல் போன குழந்தையின் உடலை அந்த கிராமத்தின் வண்ணாங்குளம் பகுதியிலிருந்து, சடலமாக மீட்டுள்ளனர் காவல் துறையினர். குழந்தையை வன்கொடுமைக்கு உட்படுத்திய, அதே பகுதியைச் சேர்ந்த பூக்கடையில் வேலை செய்த ராஜா என்பவனனை, உடனடியாக கைதும் செய்துள்ளது காவல்துறை. மேலும், இரண்டு பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் இருப்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தை ஜெயப்பிரியாவின் இறப்பை, 'மீண்டும் ஒரு சிறுமி' எனச் சொல்லியே தனது இரங்கல் வார்த்தைகளைத் தொடங்கியிருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். ஆம், ஜெயப்பிரியா, இந்த மண்ணில் கொல்லப்பட்ட மற்றுமொரு சிறுமிதானே தவிர, இது முதல் கொலை அல்ல. 2018-ம் ஆண்டில் மட்டும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகம் பதியப்பட்ட மாநிலங்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடம் தமிழகத்துக்குத்தான். 1,457 வழக்குகள் பதிவாகியது நம் ஊரில். அந்த வருடத்தில் இந்தியா முழுவதும் 39,827 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், தண்டனை விதிக்கப்படும் விகிதம் வெறும் 31.6% தான். அதேபோல், 2018 -ல் மட்டும், தமிழகத்தில், தண்டனை வழங்காமல் முடித்துவைக்கப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை 1,935. தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் 2018 கணக்குப்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 109 குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதற்கு முந்தைய ஆண்டைவிட 22% அதிகமான குற்றங்கள் நடந்துள்ளதாக அறிவித்திருந்தது தேசிய குற்றப் பதிவு பணியகம். இந்த வருடம், இந்த சதவிகிதம் இன்னும் இன்னும் அதிகரித்திருக்கும் என்பதையே சிறுமி ஜெயப்பிரியா நமக்குக் காட்டியிருக்கிறார்.

ஜெயப்பிரியாவின் மரணத்துக்கான இரங்கலைத் தெரிவித்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சொன்ன ஒரு வார்த்தையைத்தான் இங்கே பதிவிட நினைக்கிறேன். உலகம் அழியப்போகலை, நாமதான் அழிச்சுக்கிட்டு இருக்கோம். நம்முடைய அடுத்த தலைமுறையின் அழிவைப் பார்க்கும் தலைமுறை நாம்தான்.

குழந்தைகள் மீதான வன்முறையைப் பொறுத்தவரை, பதிவு செய்யப்படும் வழக்குகள் மிகவும் சொற்பம்தான். `வெளியில தெரிஞ்சா குழந்தையோட எதிர்காலமே பாழாய்டும், குடும்பத்தோட மானம் போயிடும்' என்றெல்லாம் சொல்லி, நான்கு சுவர்களுக்குள் முடிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத குழந்தை வன்முறைகள் இங்கு ஏராளம். இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அதிகமாகப் பாதிக்கப்படுவதும் குழந்தைகள் மட்டுமே.

ஒவ்வொரு குழந்தை பாதிக்கப்படும்போதும், `குட் டச் - பேட் டச் சொல்லிக்கொடுக்கணும் குழந்தைகளுக்கு' என்ற குரல் எழும்பும். ஆனால், எங்களைப் பொறுத்தவரைக் குழந்தைகளுக்கு குட் டச் - பேட் டச் உடன் சேர்த்து தைரியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் நாம். `யார் உன்னிடம் தவறாக நடக்க முயன்றாலும், அவங்களை எதிர்த்து நில்லு. எங்ககிட்ட விஷயத்தை சொல்லு. பெற்றோர் / குடும்பத்தினராகிய நாங்க உனக்கு சப்போர்ட் பண்ணுவோம்' என்ற நம்பிக்கையை, நம் நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் தரவேண்டும். 18 வயது நிரம்பியவர்களுக்கே, பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லையெனும்போது, குட் டச் - பேட் டச் புரிதலை சரியாக நம் குழந்தைகள் கையாள்வார்கள் என நாம் எதிர்பார்க்கமுடியாது. ஆகவே, அவர்களிடம் `உனக்கு அசௌகரியமாக உணர வைக்கிற நபர்களை, தைரியமா எங்ககிட்ட சொல்லு' என பெற்றோர்களாகிய நாம் தான் சொல்ல வேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையின் கோர முகமொன்று உண்டு. அது, இந்த வன்முறையைச் செய்பவர்களெல்லாம் குழந்தைக்கு நெருக்கமானவர்கள்தாம். அதனாலேயே குழந்தைகள் இது நல்லதா கெட்டதா என புரிந்து கொள்ளத் திணறுவார்கள். குட் டச், பேட் டச்சின் புரிதல் ஒருபக்கமும் - `இவர் நம்ம குடும்ப உறுப்பினர், இவர் பேட் டச் செய்றதா சொன்னா யார் நம்புவாங்க' என்ற பயம் ஒருபக்கமுமாய் குழந்தைகள் தடுமாறிப்போய் செய்வதறியாது நிற்பார்கள். இதையெல்லாம் தடுக்க, தெளிந்த மனத்தோடு குழந்தைகள் இருக்க, அவர்கள் மனது நம்பிக்கையை உணர வேண்டியது அவசியம். குறிப்பாக, மாற்று திறனாளி குழந்தைகளுக்கு இந்த நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட வேண்டும். `நம்ம சொன்னா, நம்ம வீட்ல இருக்கவங்க நம்புவாங்க. நமக்கான பிரச்னைக்கு, அவங்க தோள்கொடுப்பாங்க ; நம்முடைய அசௌகரியத்தைத் தவிர்க்க, அவங்க உதவிபுரிவாங்க' என்ற புரிதல் என்றைக்குப் பிள்ளைகளுக்கு வருகிறதோ, அன்றைக்கு இந்தக் குற்றங்கள் ஓரளவு குறையும்.

சிக்கல் இன்னும் குறைய, குழந்தைகள் தவறானவர்கள் எனச் சுட்டிக்காட்டும் நபர்குறித்து, பெற்றோர் பொதுவெளியில் பேசி, மேற்கொண்டு அந்த நபர் அப்படிச் செய்யாமல் இருக்கும்படி தடுக்க வேண்டும். அந்நபர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை எண்ணற்ற சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா...? என்றால் விடை இல்லை என்பதாகவே இருக்கிறது. காரணம் குற்றவாளிகள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கத் தவறுவதும், அப்படியே காவல்துறை விரைந்து வழக்கை விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படாததும் தான்.

இந்திய அரசியலைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர், `இந்த சட்டத்தை யாராவது தவறாகப் பயன்படுத்தினால், அப்படியான சட்டத்தை முதலில் தீயிட்டுக் கொளுத்துபவன் நானே' எனக்கூறினார். (If I find the Constitution misused, I shall be the first to burn it). ஆனால் அம்பேத்கரால் இனி வர முடியாது என நினைத்தோ என்னவோ, சட்டம் இன்றும் பாலியல் வன்புணர்வுக்கான தண்டனையை குழப்பங்கால் நிறைத்திருக்கின்றது. அதன் விளைவுதான், 15 நிமிடத்துக்கு ஒருபெண் என்ற விகிதம் பாதிக்கப்படுகிறது.

ஏழு வயது சிறுமியோ - 25 வயது பெண்ணோ. ஒவ்வொரு பாலியல் வன்முறை இறப்புக்குப் பின்னரும், லட்சங்களில் மட்டுமே தனது இரங்கலைத் தெரிவிக்கின்றது அரசு. இந்த இரங்கலை, குற்றவாளிக்கான தண்டனையின் வழியாகத் தெரிவித்தால், நன்றாக இருக்குமென்பது எங்களின் கோரிக்கை!

எதிர்பார்க்கிறோம் அரசே.

- பெ.மதலை ஆரோன்