கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் கடையை அடைக்க சொல்லும்போது வாக்குவாதம் செய்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 25-ம் தேதி திமுக எம்.பி.கனிமொழி, திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். திமுக சார்பில் ஸ்டாலின் அறிவித்த ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அப்போது அவர்கள் வழங்கினர். அன்றைய தினம் அதிமுகவும் தங்கள் தரப்பில் ரூ.25 லட்சம் தருவதாக அறிவித்தது. அரசு சார்பில் அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று குடும்பத்தினரிடம் வழங்கினார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. மேலும், நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என ஜூன் 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஜூன் 29-ம் தேதி நீதிபதிகள் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றினர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ரேவதி அப்ரூவராக மாறி, நடந்த சம்பவங்களை  தெரிவித்துவிட்டார். காவலர் முத்துராஜும் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருக்கிறார். காவல் நிலையத்தில் போலீஸாருடன் சேர்ந்து ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நான்கு பேர் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே, கைதுசெய்யப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை ரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தார்கள். காவலர் முத்துராஜிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடக்கிறது.  

ஜூன் 30-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குமார், பிரதாபன் ஆகியோர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனர். மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால அருண்கோபலன் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.  கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த குமார் நீலகிரி மாவட்டத்திற்கும், பிரதாபன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர். சாத்தான்குளம் டிஎஸ்பியாக கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய ராமநாதன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஜூன் 30-ந்தேதி மாலை மீண்டும் சாத்தான்குளம் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி, நிலைய எழுத்தர் பியூலாவிடம் மணிநேரம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, உயர்நிதிமன்ற உத்தரவுப்படி வழக்கு, சிபிசிஐடி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பி அனில்குமார் வழக்கின் கோப்புகளை பெற்றுக் கொண்டார்.

மேலும் காவலர் ரேவதி தான் அப்ரூவரக மாறியிருப்பதால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் பிரச்னைகள் வரலாம் எனக்கூறி பாதுகாப்பு கேட்டிருந்தார். நெட்டிசன்கள் பலரும், காவலர் ஒருவரே, சக காவல் துறையினரால் தனக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி காவல் துறையிடமே உதவி கேட்டிருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறதென கூறியிருந்தனர். 

பிரபலங்கள் பலரும், காவலர் ரேவதியை, தீயென சொல்லி பாராட்டி, அவர்களுக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். அதில், நடிகர் மற்றும் தோழர் கவிதாபாரதி தெரிவித்திருந்த ஆதரவு, இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

கவிதாபாரதி தெரிவித்திருந்தது இதுதான் - ``ஆறுபேர் மேல் கொலைவழக்குப் பதிவு. உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது. சி.பி.சி.ஐ.டி நடவடிக்கை. அங்கிருந்த ஆண்கள் குற்றத்தைச் செய்தார்கள். மறைந்தார்கள். நியாயத்தின் பக்கம் நின்று சாட்சி சொல்வது ஒரு பெண். கோழைத்தனத்தைப் பார்த்து பொம்பளை மாதிரின்னு இன்னும் சொல்லுவமா" என்றிருந்தார்.

இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்வீட்டில், `நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், ரேவதி... நீங்களெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை தந்திருக்கின்றீர்கள். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருப்போம்' என்று கூறியிருந்தார். இதேபோல நடிகர் ஜி.வி.பிரகாஷ், ``உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன்... உங்களோடு தேசம் துணை நிற்கிறது" என தெரிவித்திருந்தார். நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், ``சரியான பாதையை தேர்ந்தெடுத்து செல்லும் ரேவதியை நினைத்து ரொம்ப பெருமையாக இருக்கிறது" என்றிருந்தார். நடிகை ராக்‌ஷி கண்ணா ``உங்களின் நேர்மை, நீதி மீதான எங்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது" என்றிருந்தார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, ரேவ`தீ' REVA`THEE' என்று டிசைன் செய்து, அதை பகிர்ந்திருந்தார்.

இவ்வளவு பாராட்டுகளைப் பெற்ற ரேவதி, 15 வருட பணி அனுபவம் இருக்கும் 36 வயதை ஒட்டியவர் என்கிறார்கள் அவரை தெரிந்த சிலர். இவ்வளவு நீண்ட கால பணி அனுபவம் இருந்த போதிலும் மேலதிகாரிக்கு பயந்த, அதிகம் யோசித்து பேசும் சமூகத்துக்கு பயந்த சாமாணிய  பெண்ணாகவே அவர் பணிகாலத்தில் இருந்திருக்கிறார், இருக்கிறாரும்கூட. 

பெண் என்பதாலேயே, தன் மேலதிகாரிகளால் ரேவதி பலமுறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார் என்கிறார் ரேவதியை நன்கு தெரிந்த, தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ஒருவர். பெயர் சொல்ல விரும்பாத அந்த வக்கீலிடம் நாம் பேசியபோது, ``அழைத்துவரப்படும் கைதிகளை அடிப்பதென்பது, அந்த ஸ்டேஷன்ல ரொம்ப வழக்கமான விஷயம்தான். ஏறத்தாழ 38 பேர், இப்படி ஸ்டேஷன் அழைத்துவரப்பட்ட கொடூரமாக தாக்கப்பட்டிருக்காங்க. பிழைத்தால் போதுமென்ற அளவுக்கு, கொடூரமாக நடத்தப்படுவார்கள் என்பதால, மேற்கொண்டு வழக்கத்தொடுக்க பயப்படுவாங்க. அப்படி புதைஞ்சு போன பல சம்பவங்களெல்லாம், இப்போது கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது. ரேவதியை போலவே, அங்கு பணியாற்றிய மற்றொரு பெண் பணியாளரான பியூலா செல்வகுமாரியும், முக்கியமான சில உண்மைகளை மாஜிஸ்ட்ரேட்கிட்ட சொல்லியிருக்காங்க. அந்த ஸ்டேஷன்ல, கைது செய்யப்படும் நபர்கள் மேல உடல்ரீதியான வன்முறைகள் நடத்தப்படுறது எந்தளவுக்கு உண்மையோ, அதேயவளவுக்கு அங்கு பணியாற்றும் பெண்கள் மேல வார்த்தை வன்முறைகள் செய்யப்படும் என்பதும் உண்மை. அந்த இன்ஸ்பெக்டருக்கு, கொஞ்சம் அரசியல் செல்வாக்கும் உண்டுங்கறதால, கேட்க ஆள்கிடையாத அளவுக்கு அவருடைய ஆட்டம் இருக்கும். ஒருமுறை ஒரு போலீஸ் காண்ஸ்டபிள் அந்த ஸ்டேஷன்ல இருந்து வேறொரு ஸ்டேஷனுக்கு ட்ராண்ஸ்ஃபர் ஆனாரு. அப்போ,  பிரிவு உபசார விழா நடந்துச்சு. அப்போ நாங்களும் அங்க போயிருந்தோம். எங்க கண்ணு முன்னாடியே, அங்கிருந்த பெண் பணியாளர்களை பார்த்து `நீங்களாம் Unfit for this Job, போய் தூக்குபோட்டு சாகலாம் நீங்களாம்' னு சொன்னாரு. கேட்ட எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சி. அதுபத்தி அவர்கிட்ட கேட்டப்போ, இன்னும் மரியாதைக்குறைவா விஷயத்தை சொன்னாரு. உடல் ரீதியான விமர்சனங்களெல்லாம் கூட வைப்பாரு. ரேவதியேவும், ரெண்டு மூணு தடவை சண்டைபோட்டு வேலையிலருந்து பாதியிலேயே கிளம்பி போயிருக்காங்க. இன்னும் அங்கிருந்த நிறைய பெண் பணியாளர்கள், ரொம்ப மோசமான முறையில தாக்கப்பட்டிருக்காங்க" என்றார் ஆதங்கத்துடன்.

தனது வாக்குமூலத்தில் ரேவதி, `கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததனர். அதனால் லத்தி மற்றும் டேபிளில் கரை படிந்தது. அதனை அவர்கள் அழிக்க வாய்ப்பிருந்தால், அவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும்' என்று நீதித்துறை நடுவரிடம் கூறியிருந்தார். மேலும் `அவர்கள் அடித்தபோது, நான் ரொம்ப பயந்திருந்தேன். என்னால் எதையும் தடுக்க முடியவில்லை என்பதால், என் அறைக்குள் முடங்கி கிடந்தேன்' எனக்கூறியுள்ளார்.

சமூகதளவாசிகள் சிலர், ரேவதியின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால், புகைப்படத்தை பகிர்வதேவும் ரேவதிக்கு பிரச்னையாகிவிடக்கூடும் என்பதால், பின்னர் அதை நீக்கிவிட்டனர். அதேபோல இந்த நிகழ்வுக்குப் பிறகு நிருபர்கள் பலர் ரேவதியின் பேட்டிக்காக காத்திருக்கவே, அவர்களுக்கு ரேவதி தொலைபேசி வழியில் பேட்டி கொடுத்திருந்தார். அப்போதும் அவர் மிகுந்த அச்சத்துடன், ``இது இவ்வளவு பெரிய விஷயமாகும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. இப்போதைக்கு எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு தேவை" எனக்கூறியிருந்தார். ரேவதியின் பயத்தை போக்கும் கடமை, நம் அனைவருக்குமே இருக்கிறது.

கோழையென சொல்வதை விட்டுவிட்டு, நம் இந்தியாவின் ரேவதிக்களின் பலமாக இனியாவது இருப்போம் நாம்.

- பெ.மதலை ஆரோன்