தேசிய சராசரியை விட தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துத் தான் காணப்பட்டன. குறிப்பாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு தொடக்கம் முதல் 2 வது இடத்தில் தான் இருந்து வருகிறது. 

இந்நிலையில், இடைப்பட்ட காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று சென்னையைத் தவிரத் தமிழகத்தின் பிற பகுதிகளில் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பானது தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இதற்கு முன்பு இருந்த தேசிய சராசரியை விட, சற்று அதிகமாகக் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் இன்று மட்டும் இது வரை ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்தியாவிலேயே கொரோனாவால் மிகவும் அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனா வளர்ச்சி விகிதம் 3.40 சதவீதமாகவே உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1,92,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,376 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ள தமிழகத்தில், நேற்று மாலை 6 மணி வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்து இருந்தது. அத்துடன், பலி எண்ணிக்கையானது 1,385 ஆக உயர்ந்து உள்ளது. அத்துடன், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 28,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்யைில் நேற்று ஒரு லட்சத்தைத் தாண்டியது.  

அதேபோல், தேசிய சராசரியில் கொரோனா சற்று அதிகரித்துக் காணப்படும் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில், தலா 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன. ஆந்திரா மாநிலத்தில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5,500 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
இதன் காரணமாகத் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்ப பணியை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

அதே நேரத்தில் பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் வெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கேரளாவில் இதுவரை 2,098 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 26 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ள டெல்லியில், 94,695 பேர் மட்டுமே கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் கொரோனாவுக்கு இதுவரை 2,923 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பின் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ள குஜராத்தில், 34,686 கொரோனா பாதிப்புகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கொரோனாவால் 1,905 பேர் மட்டுமே இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா பாதிப்பு பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 25,797 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 749 உயிர் இழப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

அதேபோல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 6,51,046 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,691 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து இதுவரை 3,94,849 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகமாக செய்யப்படுவதாலேயே, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகாரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.