முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் விமானம், ஹெலிகாப்டர் போன்றவை விபத்தில் சிக்குவது பலமுறை நடந்துள்ளது. இதில் முக்கிய பிரபலங்கள் பலர் உயிர் இழந்துள்ளனர். அதைப்பற்றிய சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி (Y. S. Rajasekhara Reddy): ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருமுறை பதவி வகித்தவர் ராஜசேகர ரெட்டி என்கிற ஒய்.எஸ்.ஆர். கடந்த 2009 ஆம் ஆண்டில் இவர் பயணித்த ஹெலிகாப்டர் ருத்திரகொண்டா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. பலத்த தேடுதலுக்குப் பின்னர், கண்டுப்பிடிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது இறப்பு செய்தி கேட்டு மீளா துயரில் ஆழ்ந்த நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொண்டனர்.

நடிகை சவுந்தர்யா (Soundarya): தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சவுந்தர்யா. பொண்ணுமணி, அம்மன், அருணாச்சலம், படையப்பா உட்பட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தெலுங்கு சினிமாவின் நவீன சாவித்ரி என்று அழைக்கும் அளவுக்கு தனது நடிப்பு திறமையால் மக்களின் மனங்களை வென்ற சவுந்தர்யா, கடந்த 2004 ஆம் ஆண்டு பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கரிம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது விமானம் வெடித்து சவுந்தர்யா உயிரிழந்தார். மேலும் அப்போது நடிகை சவுந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது.

மாதவராவ் சிந்தியா ( Madhavrao Scindia): பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் குவாலியரின் சுதேச அரசின் கடைசி ஆளும் மஹாராஜாவான சிவாஜிராவ் சிந்தியாவின் மகன். மத்திய விமான போக்குவரத்து அமைச்சர், மத்திய சுற்றுலா துறை அமைச்சர், மத்திய ரயில்வே இணை அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த சிந்தியா, இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராகவும் கருதப்பட்டார். இந்நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தில் நடந்த விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா உயிரிழந்தார்.

ஜி. எம். சி. பாலயோகி (G.M.C.Balayogi): ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரான இவர், இந்தியாவின் 12-வது மக்களவை தலைவராக பணியாற்றியுள்ளார். மக்களவை தலைவராக இருந்தபோதே கடந்த 2002 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

சஞ்சய் காந்தி (Sanjay Gandhi): இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன். இந்திரா காந்திக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவராக உருவாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி, கடந்த 1980 ஆம் ஆண்டு அப்போதைய புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையமருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்.

மோகன் குமாரமங்கலம் (Mohan Kumaramangalam) : மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.சுப்பராயனின் மகன். மத்திய உருக்கு அமைச்சராக இருந்துள்ள மோகன் குமாரமங்களம், கடந்த 1973 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் பயன்படுத்தும் பார்க்கர் பேனா மற்றும் காதில் அணியும் கருவி மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

டோர்ஜி காண்டு (Dorjee Khandu): அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இவர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. மே 5 ஆம் தேதி டோர்ஜி காண்டுவின் இறப்பை அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

ஓம் பிரகாஷ் ஜின்டல் (Om Prakash Jindal): ஜின்டல் என்று அழைக்கப்படும் ஓம் பிரகாஷ் ஜின்டல். மாபெரும் தொழில் அதிபராக திகழ்ந்தவர். ஹரியானாவின் மின் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2005 ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.