பள்ளி மாணவிகள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதுவும், சென்னை ஆவடியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கம் நிலையில், பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாது, பள்ளி மாணவிகளும் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மாணவிகள் சிலர், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் மாணவிகள் சிலர் 2 குழுக்களாக பிரிந்து பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களில் யார் என்ன சொன்னார்கள் என்று சரியாகத் தெரியாத நிலையில், 2 குழுக்களாக பிரிந்து நின்றிருந்த பள்ளி மாணவிகள் திடீரென்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

பள்ளி மாணவிகளின் இப்படி சண்டையிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு நின்றிருந்தவர்கள், உடனடியாக அவர்களை தடுக்க முயன்றனர். ஆனாலும், மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதை மாணவிகள் சற்றும் நிறுத்தவில்லை. இப்படியாக, நீண்ட நேரமாக பொது மக்கள் போராடி, மாணவிகளின் சண்டையை விலக்கி வைத்தனர்.

இந்த சூழலில் தான், மாணவிகள் அடித்துக்கொள்ளும் இந்த சண்டை காட்சிகளை, அங்கு நின்றிருந்த சில இளைஞர்கள், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதனையடுத்து, மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பள்ளி மாணவரும், மாணவியும் ஆபத்தான முறையில் பயணித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதே போல், சோழவரம் மெய்யூர் பகுதியில் ஒடும் பேருந்துகளில் சாகச பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவிகள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.