குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் இன்று மதியம் 12 மணியளவில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்தாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் காயங்களுடன் மூவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 

ஆனால் யார் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்துள்ளதால் பிபின் ராவத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. 

கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 வி5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்துள்ளார். 

bipin rawat chopper crash

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இந்த ஹெலிகாப்டரில் பயணித்ததால் விபத்து நிகழ்ந்தது எப்படி? யார் யார் பயணித்தனர்? இந்த விபத்துக்கு பின் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் இதில் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், விபத்துகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.