குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தநிலையில் சுமார் ஒன்றரை மணிநேர போராட்டத்திற்குப்பிறகு தீ அணைக்கப்பட்டது.  11 பேர் பலியாகி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட, ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ - 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் ராணுவ அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். 

தலைமை ஜெனரல் பிபின் ராவத் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டிருக்கிறது. 

bipin rawat chopper crash

இந்த விபத்தானது மதியம் 12.20 மணிக்கு, அதாவது வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு 10 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தது. மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

ராணுவ போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்க முடியும். மேலும் மோசமான வானிலையையும் சமாளித்து பறக்கக்கூடிய திறன் வாய்ந்தது இந்த ஹெலிகாப்டர். ஹெலிகாப்டரின் எரிபொருள் கொள்ளளவும் அதிகம். 

ஒருவேளை தொழில்நுட்ப கோளாறால் விபத்து நிகழ்ந்திருந்தால் எரிபொருள் முழுவதுமாக எரிந்திருக்கலாம் என்றும், இதனால் தீயை அணைப்பது சிரமமாக இருந்திருக்கலாம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் எரிந்த நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

chopper bipin

சம்பவ இடத்தில் இருந்து 11 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தலைமை தளபதியின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விபத்து குறித்து விமானப்படை மற்றும் ராணுவம் தரப்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக போலீசாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.  

இதேபோல் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தனது துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர், விமானப்படை தளபதியை சம்பவ இடத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 மணியளவில் குன்னூர் சென்று, மீட்புப்பணிகள் மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்கிறார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணம் செய்தாலும் அவரது நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் தவிர மேலும் பலர் நிலை தெரியாத நிலையில் பயணம் செய்த தலைமை தளபதி நிலை என்னவென்று தெரியவில்லை.