இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் கொரோனா கடுமையாகத் தாக்கி வருகிறது.

இந்த கொரோனா நோய்த்தொற்றால், இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றால் நியூயார்க்கில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக 210 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 19 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “71 வயதாகும் இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருந்து வந்ததாகவும், ஆனாலும் அவர் உடல் நலமுடன் வீட்டிலிருந்து தனது பணிகளை மேற்கொண்டு வந்தார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது “இளவரசர் சார்லஸ்க்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இளவரசர் சார்லஸின் மனைவி கமில்லாவுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளவரசர் சார்லஸும், அவரது மனைவி கமில்லாவும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.