144 தடை உத்தரவை மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. 

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Action on people breaking section 144 in India

அத்துடன், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலானது. இந்தியா முழுமைக்கும் நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலானது.

அதன்படி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாரும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

இதனிடையே, நள்ளிரவில் பலர் சென்னையின் முக்கியமான சாலைகளில் வாகனங்களில் வலம் வந்தனர். அவர்கள் அனைவரும் எச்சரித்து அனுப்பப்பட்டனர். மேலும், சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை, ஓ.எம்.ஆர் சாலை, ஈ.சி.ஆர். சாலை ஆகியவற்றில் வெளியூர்களிலிருந்து சென்னைக்குள் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவைப் பின்பற்றுமாறு அனைவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பியதாகத் தெரிகிறது. 

அதேபோல், சென்னைக்குள் நுழையும் வாகனங்களைத் தடுக்க, எல்லைகளில் 8 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Action on people breaking section 144 in India

குறிப்பாக, 144 தடை உத்தரவு மீறலை கண்காணிக்க, சுமார் 30 பறக்கும் படைகளும், 400 ரோந்து வாகனங்களும் பகல் - இரவு நேரங்களில் சென்னை முழுவதும் வலம் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று போலீசாரின் ரோந்து வாகனங்கள் சென்னையை வட்டமிட்டன.

மேலும், நேற்று முதல் நாள் என்பதால் எச்சரித்து அனுப்பிய போலீசார், இனிமேல் தடை உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில், இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று காலையில் காவல் துறை வட்டாரங்கள்  கூறுய நிலையில், தற்போது உத்தரவை மீறிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுவோர், உரிய அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் பெற்று பயணம் செய்ய வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், “மக்கள், உத்தரவைக் கடைபிடிக்கவில்லை என்றால், மிகக் கடுமையான நடவடிக்கையாக கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும்” என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.