தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அறிவிக்கப் பள்ளிக் கல்வித் துறைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

School exams cancelled to Corona Virus

இதனால், புதுச்சேரியில், முதல் வகுப்பு முதல், 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி, தேர்ச்சி செய்யப்படுவதாகப் புதுச்சேரி கல்வி இயக்குநரகம் அறிவித்தது. 

அதேபோல், தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் வகுப்பு முதல், 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

School exams cancelled to Corona Virus

இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல், 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர்” என்று  அறிவிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.