கொரோனா தாக்கத்தால் மக்களை வெளியே வர விடாமல் தடுக்கும் விதமாக, ரஷ்யா சாலையில் சிங்கங்களை அவிழ்த்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதி தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என்றும், அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

அதேபோல், ரஷ்யாவில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று, அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், சாலைகளில் அதிகம் நடமாடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரஷ்ய வீதிகளில் சிங்கங்கள் நடமாடுவதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், “கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் வகையில், ரஷ்ய அதிபர் புதின் சிங்கத்தை வீதியில் விட உத்தரவிட்டதாகவும்” செய்திகள் வெளியானது. இதற்கு, இணைய வாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

அத்துடன், வீதியில் சிங்கம் நடந்து வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரஷ்ய மக்களை கடும் பீதி அடையச் செய்துள்ளது. 

இதனிடையே, “இந்த செய்தி முற்றிலும் தவறான என்றும், இந்த புகைப்படத்திற்கும் செய்திக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட அந்த புகைப்படமானது கடந்த 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பார்க் வீதியல் எடுக்கப்பட்டது என்றும், ஒரு திரைப்படத்தின் பட பிடிப்புக்காக, அந்த சிங்கம் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்ய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.