இந்தியாவில் 46,617 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,573 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் 3 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் போராடி வருகின்றன.

இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால், 195 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மும்பையில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,541 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 583 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 5,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,898 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் 3,127 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 2,942 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2,766 பேரும் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,717 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரை அந்த மாநிலத்தில் 589 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் இன்று 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்த மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,259 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 2 வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் 230 லிருந்து 357 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,573 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,617 ஆக அதிகரித்துள்ளது.