பெட்ரோல், டீசல் விலைக்கான மதிப்பு கூட்டு வரியைத் தமிழக அரசு உயர்த்தி உள்ளதால், கொரோனா காலத்திலும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால், நாடே பொது முடக்கத்தில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Petrol, Diesel Value Added Tax Increase in Tamil Nadu

இதனால், மத்திய - மாநில அரசுகளுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்திய அரியானா உள்ளிட்ட சில மாநில அரசுகள், மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்திலும் வருவாயை பெருக்க சில முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, இழப்பை சரி கட்டும் வகையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி உள்ளது. 

இது தொடர்பான அரசாணையையும், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

அதன்படி,  பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி, 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 

Petrol, Diesel Value Added Tax Increase in Tamil Nadu

இதன் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்ந்தது. அத்துடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை அரசு பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கும் என்று, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.