தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் உட்பட அனைத்து விதமான கடைகளும் அதிரடியாக மூடப்பட்டன.

Allow Tasmac to open in Tamil Nadu

சுமார் 40 நாட்கள் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் கடைகள் திறந்திருப்பதில், பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இதனிடையே, நேற்று முதல் டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அலைமோதியது. கர்நாடக மாநிலத்தில் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடையால், ஒரே நாளில் 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. 

இதனையடுத்து, தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும், தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படும் என்றும், டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

அத்துடன், டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள், 6 அடி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

Allow Tasmac to open in Tamil Nadu

அதேபோல், தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும், இவற்றை கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 

இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி.தினகரன், “கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் நாள்தோறும் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல் என்றும், பொறுப்பற்ற இந்த நடவடிக்கையை அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.