தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் வெயில் சதம் அடித்ததால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.

கொரோனாவின் கோர தாண்டவம், ஒரு பக்கம் மிகப் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் அக்னி நட்சத்திரம் என்னும் உக்ர வெயில் தாக்கம், நேற்று முதல் தொடங்கி உள்ளது.

Tamil Nadu heat wave 2020 begins

இந்த கத்திரி வெயில் காலகட்டத்தில், வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படுவது வழக்கம். வெயிலின் உக்கிரம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக கடுமையான வெப்பத்தை காட்டும்.

இந்த ஆண்டு, கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டு வந்தது. அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வந்த நிலையில், நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளே மதுரை, சேலம் பகுதிகளில் தலா 102 டிகிரியும்; திருச்சி, தருமபுரி, பாளையங்கோட்டையில் தலா 101 டிகிரியும்; கோவை, நாமக்கல், திருத்தணி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானது.

தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், இதே நிலையே மேலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

Tamil Nadu heat wave 2020 begins

குறிப்பாக, சேலம், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட, அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.