தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 3 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும், கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. அது, தீவிரமாகப் பரவி வருகிறது.

coronavirus tamilnadu update 3,023 test positive

இதனிடையே, கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 430 பேரின் பரிசோதனை முடிவுகளுக்காகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். 

மேலும், கடலூரில் இதுவரை 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த 699 பேரும், கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதன் மூலம், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160 தாண்டி உள்ளது. 

அதேபோல், கடலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளி​ல் 39 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதுவரை, அந்த மாவட்டத்தில் 86 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 39 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த மாவட்ட மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

coronavirus tamilnadu update 3,023 test positive

கொரோனா தொற்று உறுதியான அனைவரும், கோயம்பேடு சந்தையுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியில் 2 பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுடைய குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையிலிருந்து வந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் மற்றும்‌‌ ஆம்புலன்ஸ் ‌பணியாளர்கள் 4 பேர் என புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus tamilnadu update 3,023 test positive

குறிப்பாக, கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு புதிதாக இல்லாமல் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவிததள்ளது.

அதேபோல், கொரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்காக, மத்திய சுகாதாரத்துறை சிறப்புக்குழு, சென்னை வருகிறது. கொரோனா அதிகமுள்ள நாட்டின் 20 முக்கிய நகரங்களில், சிறப்புக் குழு சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படியே, அந்த குழு தற்போது சென்னை வந்து ஆய்வு மேற்கொள்கிறது.

அத்துடன், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் தமிழகம் திரும்புவதற்காக, தமிழக அரசு ஏற்படுத்திய இணையதளத்தில் இதுவரை 1.26 லட்சம் பேர், பதிவு செய்துள்ளனர்.

மேலும், "மகாராஷ்டிராவில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்துவரக் காலம் தாழ்த்தாது, தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, தமிழக தொழிலாளர்களை விரைந்து மீட்க வேண்டும்” என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,07,895 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,85436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இதுவரை 4.01 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.