கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 35 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை அங்கு படிக்கும் மாணவர்கள் வைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏசுபிரான் பிறந்த நாளை கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதற்கு வீட்டில் ஏசு கிறிஸ்து பிறந்த கருப்பொருளை மையமாக வைத்து வீட்டில் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது வழக்கம். அது போல் கிறிஸ்துமஸ் அன்று கேக், சாக்லேட்டுகளை நண்பர்களுக்கு கொடுப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மாணவர்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. அது 35 அடி உயர மரமாகும். இந்த கிறிஸ்துமஸ் மரத்தை வேந்தர் சாமுவேல் தினகரனும் டாக்டர் ஷில்பா தினகரனும் தொடங்கி வைத்தார்கள். 1981-ம் ஆண்டு டிஜிஎஸ் தினகரன் தமக்கு இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வகையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைக்க முயன்றார். அதன்படி அக்டோபர் 4-ம் தேதி 1986-ம் ஆண்டு காருண்யா தொழில்நுட்பக் கழகமாக உருவானது.

மேலும் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாக விளங்கியது. இதையடுத்து 2004-ம் ஆண்டு கல்வி சிறப்பை பாராட்டி இந்த பொறியியல் கல்லூரி காருண்யா பல்கலைக்கழகமாக தரம் உயர்ந்தது. அதன்படி இந்த பல்கலைக்கழக கல்லூரி, இந்தியாவின் முதல் 15 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. அது போல் பொறியியல் கட்டமைப்புகளில் முதல் 10 கல்லூரிகளில் ஒன்றாகவும் உள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்த கல்லூரியை கடந்த 1986-ம் ஆண்டு தொடங்கி தற்போது 35 ஆண்டுகள் ஆவதை நினைவுப்படுத்தும் விதமாக மாணவர்கள் 35 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளனர். இந்த பணியில் அனைத்து தரப்பு மாணவர்களும் ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஒன்றாக ஈடுபட்டுள்ளது மனிதத்தை கொண்டு வரும் என வேந்தர் சாமுவேல் தினகரன் வாழ்த்தினார். ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.