சமூகவலைத்தளங்களில் பெயர் மாற்றுவதை இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர். இதையடுத்து நடிகர் விஜய்யின் 'தமிழன்' படத்தின் மூலம் நடிகையாக பிரியங்கா சோப்ரா அறிமுகமானார். 

அதன்பின்னர் இந்தியில் கால் பதித்த அவர் தொடர்ந்து அங்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.  நிறைய ஆங்கிலப் படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது இளையவரான பாப் பாடகர் நிக் ஜோனாஸை பிரியங்கா சோப்ரா காதலித்து கரம் பிடித்தார்.

priyanka chopraஇவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து தனது கணவர் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்களா என ரசிகர்கள் சந்தேகம் கிளப்பினர். 

ஆனால் பிரியங்கா தரப்பு இதனை மறுத்தது. இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் தாய் மதுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவை வீண் தகவல்கள். அவற்றை எல்லாம் நம்பாதீர்கள்" என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது பெயர் மாற்றத்தைப் பற்றி பேட்டி ஒன்றில் பேசியபோது "எனக்குத் தெரியாது. பயனர் பெயர் எனது ட்விட்டருடன் பொருந்த வேண்டும் என்று நான் விரும்பினேன். கணவர் பெயரை நீக்குவது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 

மக்களுடன் பழகுங்கள். இது சமூக ஊடகங்கள், நண்பர்களே. அமைதியாக இருங்கள்" என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.  இதன்மூலம் விவகாரத்து சர்ச்சை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

priyanka chopra

இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா நடித்த ஆங்கிலப் படமான 'மேட்ரிக்ஸ் 4' நேற்று உலகமெங்கும் வெளியானது. இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ விழாவில் கணவர் நிக் ஜோனாஸின் பெற்றோருடன் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “அப்போது நான் இந்தியாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். 

எனது மேலாளரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே என்னை அமெரிக்கா திரும்பும்படி அழைத்தார். நான் சான் ஃபிரான்சிஸ்கோவில் இறங்கியதுமே ஸ்கிரிப்டைக் கொடுத்து ‘வெல்கம் டூ மேட்ரிக்ஸ்’ என்று சொன்னார்கள். 

என்னால் நம்பவவே முடியவில்லை. அதன்பிறகு மேட்ரிக்சின் முந்தைய பாகங்களை திரும்ப திரும்பப் பார்த்து அதில் உள்ள கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு நடித்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.