“எனக்கு வாழவே பிடிக்கல.. என்னைய பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்” என்று, போலீசாரிடம் ஒருவர் வாண்டடாக வந்த நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“ 'நான் ஜெயலுக்கு போறேன்.. நான் ஜெயலுக்கு போறேன்.. எல்லாரும் பாத்துக்கங்க.. நான் ஜெயலுக்கு போறேன்' என்று, வசனம் பேசி வாண்டடாக போலீஸ் வாகனத்தில் ஏறிச் செல்லும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியை” யாரும் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் தனி முத்திரைப் பதித்த நகைச்சுவை காட்சி அது. தற்போது, அதை நினைவு கூறும் வகையில் அதே போன்ற ஒரு சம்பவம், நிஜத்தில் நடந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் பர்கஸ் ஹில்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கிறார். இதனால், அதிகமாக யாரிடமும் பேசாமல் அதிக நேரம் அவர் தனிமையாகவே இருந்திருக்கிறார். இப்படி, தனிமையில் அவர் என்ன யோசித்தாரோ தெரியவில்லை, மறு நாள் “எந்த ஒரு குற்றமும் செய்யாமல், அவரே அங்குள்ள பர்கஸ் ஹில்ஸ் காவல் நிலையம் வந்திருக்கிறார்.

அங்கு, காவல் நிலையத்தில் இருந்து சக போலீசாரிடம், “என்னை சிறையில் அடையுங்கள்” என்று, வாண்டடாக வந்து கூறியிருக்கிறார்.

அப்போது, “ஏன் உன்னை கைது செய்ய வேண்டும்? நீ யார்? என்ன குற்றம் செய்தாய்?” என்று, போலீசார் வரிசையாக கேள்விகேட்டுக்கொண்டே இருந்து உள்ளனர்.

அப்போது பதில் அளித்துப் பேசிய அந்த நபர், “ஊரடங்கு காலத்தில் நான் வீட்டிலேயே இருந்து வந்ததால், எனக்கு எரிச்சலாகி விட்டது என்றும், இதனால்  எஞ்சிய காலத்தை நான் அமைதியான முறையில் இருக்க விரும்புகிறேன்” என்றும், பதில் அளித்து உள்ளார். 

அத்துடன், “இது வரை, நான் பழகிய வாழ்ந்த மக்களுடன் இனியும் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை என்றும், எனக்கு புதியதொரு சூழல் தேவைப்படுகிறது என்றும், இதற்காகவே நான் சிறையில் அமைதியாக இருக்க விரும்புகிறேன்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பர்கஸ் ஹில்ஸ் காவல் நிலைய போலீசார், அந்த நபரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே திகைத்துப் போய் நின்று உள்ளனர். மேலும், அந்த நபருக்கு அங்கிருந்த போலீசார் அனைவரும் அறிவுரை கூறி அனுப்பி வைக்க முயன்று உள்ளனர். ஆனாலும், அந்த நபர் அங்கிருந்த செல்லாமல், “என்னை சிறையில் அடையுங்கள்” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்து உள்ளார்.

மேலும், “தற்போது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட, சிறை வாழ்க்கை மேலானது” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, அந்நாட்டின் ஊடகங்களிடம் பேசிய பர்கஸ் ஹில்ஸ் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் டேரன் டைலர் பேசும் போது, “ஒருவர் நேற்று பிற்பகல் நேரத்தில் எங்கள் காவல் நிலையத்திற்குள் எங்களிடம் வந்து சரணடைந்தார்” என்று, குறிப்பிட்டார்.

“அவர் இது வரை வாழ்ந்த மக்களுடன் தற்போது மீண்டும் வாழ பிடிக்காமல், சிறையில் அமைதியாக இருக்க விரும்புவதாக” எங்களிடம் தெரிவித்தார். 

இதனால், நாங்கள் அனைவரும் சற்று குழப்பம் அடைந்தோம். ஆனாலும், அந்த நபருக்கு சில அறிவுரைகளைச் சொல்லி, அவரை மீண்டும் வீட்டிற்கே அனுப்பி வைத்து உள்ளோம்” என்றும், அவர் கூறினார். இந்த செய்தி, அந்நாட்டின் ஊடகத்தில் வெளியான நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.