“10 அமாவாசைக்குள் தி.மு.க. ஆட்சி பஞ்சராகி விடும்”... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம்!

“10 அமாவாசைக்குள் தி.மு.க. ஆட்சி பஞ்சராகி விடும்”... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம்! - Daily news

தமிழகத்தில் பத்து மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

கோவை ஒசூர் சாலையில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொணடனர். 

இதில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன் பேசும் போது, "தி.மு.க. ஆட்சி பத்து அமாவாசைக்குள் பஞ்சராகி விடும். பல கட்சிகள் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. இது மக்களால் தொடங்கப்பட்ட கட்சி. பல பொய்களை கூறி ஆட்சியை பிடித்தது தி.மு.க. சொன்னதை செய்யாத தி.மு.க.வை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

POLLACHI JAYARAMAN

அ.தி.மு.க.காரன் அடி வாங்குவதில் விண்ணை தொட்டு நிப்பான். அடிப்பதில் ஆகாயத்தை தாண்டி அடிப்பான். 6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா? நாங்கள் சிலிர்த்து எழுந்தால் அ.தி.மு.க. எதிரிகள் தாங்கமாட்டார்கள். 

எந்த ஊரில் இருந்து எலி வந்தாலும் சரி, பெருக்கான் வந்தாலும் சரி. எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எங்களுக்கு எஸ்.பி.வேலுமணி ஒருவரே போதும்" என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவும், வளர்ந்ததாகவும் வரலாறு இல்லை. 

இந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என தெரியாத சூழ்நிலை தான் இருக்கிறது. அ.தி.மு.க. எதற்கும் அஞ்சாது. அச்சப்படாது. எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்திக் காட்டுவோம். 10 அமாவசைக்குள் அ.தி.மு.க. அரியணை ஏறும்" என அவர் தெரிவித்தார். இதற்கிடையே கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

“கடந்த ஆறு மாதத்தில் தி.மு.க, அரசு எதுவும் செய்யவில்லை. ஒன்றிரண்டை தவிர, எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், கட்டப்பஞ்சாயத்து நடந்ததா? நில அபகரிப்பு இருந்ததா? கட்சிக்காரர்கள் வசூல் செய்தார்களா? ஆனால் இப்போது தொழில் நடத்த முடிகிறதா? வண்டியில் ஜல்லி, கல், செங்கல் கொண்டு போக முடிவதில்லை.

முதல்வர்களாக ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி இருந்தபோதும், வெள்ளம், வறட்சி, புயல் வந்தது; அதை சமாளித்தோம். போலீசார் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டத்துக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம். 10 ஆண்டுகள் ஆட்சியில் போலீசாரை தொந்தரவு செய்திருக்கிறோமா; யாரையும் மிரட்டியதில்லை.

POLLACHI

ஜெயலலிதா நினைவு நாளன்று ஊர்வலம் செல்வது வழக்கம். இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் மீது வழக்கு போடுவது சரியா ?தி.மு.க., அமைச்சர்கள் வருகிறார்கள். எவ்வளவு கூட்டம் கூடுகிறது. முதல்வர் வந்தாரே; எவ்வளவு பேர் திரண்டார்கள். அப்போது, கொரோனா விதிமுறை சொல்லி, வழக்கு போட்டீர்களா? எங்களை மிரட்டி, பணிய வைக்க முடியாது. எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதற்காக நியாயமாக நடந்து கொள்கிறோம்.

அ.தி.மு.க. ஆட்சியில், 50 ஆண்டு கால வளர்ச்சியை கொடுத்திருக்கிறோம். டெண்டர் கோரப்பட்டு, வேலை உத்தரவு வழங்கிய, 300 ரோடு பணிகளை ரத்து செய்திருக்கின்றனர். ரோடெல்லாம் பள்ளமாக இருக்கிறது. ரோடு போடும் பணியை மீண்டும் செய்ய வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில், வேற மாதிரி நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்; அதற்கு, நாங்கள் பயப்பட மாட்டோம். 100 வார்டுகளில் ஜெயிப்பது உறுதி.

சர்வ சாதாரணமாக, ஒரு லட்சம் பேரை திரட்டுவதற்கான திறமை நம்மிடம் இருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நமது சக்தியை நிரூபித்துக் காட்ட வேண்டும். திரளும் கூட்டத்தை பார்த்து, கோட்டை நடுங்க வேண்டும்.முதல்வர் கோவை வந்தபோது, போலீசார் என்ன செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

தொண்டர்கள் மீதோ, நிர்வாகிகள் மீதோ வழக்கு போட்டால், எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம். தேவையில்லாமல் சீண்டாதீர்கள் என எச்சரிக்கிறோம்” இவ்வாறு வேலுமணி கூறினார்.

Leave a Comment