வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். பலே பாண்டியா, ராட்சசன், முண்டாசுப்பட்டி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

அவரை பிரிந்த பிறகு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. லாக்டவுன் நேரத்தில் தான் ஜுவாலாவுக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால்.

பிரபு சாலமன் இயக்கத்தில் தான் நடித்த காடன் பட விளம்பர நிகழ்ச்சியின்போது தனக்கு விரைவில் திருமணம் என்று கூறினார். இந்நிலையில் திருமண பத்திரிகையை இன்று ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் விஷ்ணு விஷால். ஏப்ரல் 22ம் தேதி அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் திருமணத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்ளப் போகிறார்களாம்.

விஷ்ணு விஷால் வெளியிட்ட பத்திரிகையை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த துணையாவது கடைசி வரை நீடிக்கட்டும் என்கிறார்கள் ரசிகர்கள். ஜுவாலா கட்டா அண்மையில் தான் ஹைதராபாத்தில் தன் பெயரில் விளையாட்டு அகாடமியை துவங்கினார். நேரம் கிடைக்கும்போது எல்லாம் விஷ்ணு விஷால் அந்த அகாடமிக்கு சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறார்.

விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.