கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்கவும் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றவும் அடுத்தடுத்து மாஸான திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. அந்த வகையில் முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று (ஏப்ரல் 13-ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள பீஸட் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று தனது வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து ஒட்டு மொத்த இந்திய சினிமாவே காத்துக்கொண்டிருந்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் நாளை (ஏப்ரல் 14ம் தேதி) ரிலீசாகிறது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ராக்கி பாய் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் திரையரங்குகளுக்கும் மேல் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக வருகிற ஜூன் 3-ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கும் விக்ரம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜயின் பீஸட் மற்றும் நாளை முதல் ரிலீசாக உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 ஆகிய திரைப்படங்களில் இடைவேளையின் பொழுது திரையரங்குகளில் விக்ரம் திரைப்படத்தின் (FIRST GLANCE) முதல் டீசர் வீடியோ ஒளிபரப்பப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.