தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. பலரது பாராட்டுக்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த ஒத்த செருப்பு திரைப்படம் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் இயக்குனர் பார்த்திபன் இயக்கினார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் பார்த்திபன் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார் . குறிப்பாக இயக்குனர் மணிரத்தினத்தின்  இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன்.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பார்த்திபன், அடுத்ததாக ஒத்த செருப்பு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் உலக சாதனை படைப்பாக இயக்கியுள்ள திரைப்படம் இரவின் நிழல். உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் திரைப்படமாக இரவின் நிழல் திரைப்படம் தயாராகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இரவின் நிழல் படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபனின் இந்த உலக சாதனை முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ASIA புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் இரவின் நிழல் படம் இடம் பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கே உரித்தான பாணியில்,

16 வயதினிலே ‘ வில் ஒரு டயலாக் 
சப்பானியடம் மயிலு: “உன்ன எல்லாரும் இப்ப கோபாலகிருஷ்ணன்னு தானே கூப்பிட்றாங்க?” 
சப்  :”எவன் கூப்பிட்றான்? நானே தான் சொல்லிகிட்டு  திரியிறேன்”
ஒப்புக்கொண்ட Asia book of Records (vivek) India book of records-க்கு நன்றி

என தெரிவித்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சான்றிதழ்களை பகிர்ந்துள்ளார்.