பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிய நடிகர் நகுல் தொடர்ந்து காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். குறிப்பாக காதலில் விழுந்தேன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் வெளிவந்த நாக்க முக்க பாடலும் நடனமும் அச்சமயத்தில் மிகவும் ட்ரெண்டானது.

அடுத்தடுத்து மாசிலாமணி, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட கமர்சியல் படங்களில் நடித்த நகுல் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்த வல்லினம் மற்றும் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் மிகவும் கவனிக்கப்பட்டன.

முன்னதாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் நகுல் நடித்துள்ள எரியும் கண்ணாடி திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் RG.கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் நகுல்.

நடிகர் நகுல் முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது ஸ்ருதி பாஸ்கர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை நடிகர் நகுல் உறுதி செய்துள்ளார். மீண்டும் தந்தையாக உள்ள நடிகர் நகுலுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sruti Nakul (@srubee)