பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், தனது நடிப்பால் திரை ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, சத்ரியன் ஆகிய படங்களில் நடித்தார். 

கடந்த ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் அசுரகுரு என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கியிருந்தார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஹிமா நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, ஜகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடிகர்  விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் பிரபு, தற்போது தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

விக்ரம் பிரபு கைவசம் பொன்னியின் செல்வன் திரைப்படம் உள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்கி வருகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.