திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒருவழியாக உறுதியானது. அது என்னப்பா ஒரு வழியாக என்று சொல்றீங்க என்று கேட்டால், வேறு வழியே இல்லாமதான் உறுதியானது என்றுதான் சொல்லவேண்டும் . 


அதவாது கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட  தொகுதிகளின் எண்ணிக்கை 41.ஆனால் வெற்றி கனியை பறித்தது என்னவோ 8 தொகுதிகளின் தான். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. 


கூட்டணி பேச்சுவார்த்தை அரசல்புரசலாக துவங்கியிருந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது.நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் , மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற கூட்டணியை திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்று பல கட்சிகள் சேர்த்து அமைத்தன.


 அந்த தேர்தலில் காங்கிரசுக்கு திமுக வழங்கிய தொகுதிகள் 9. அந்த கணக்கை மனதில் வைத்துக்கொண்டுதான் காங்கிரஸ் கட்சி ஒரு கணக்கை மனதில் ஓடவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை இரண்டு மூன்று கட்டங்களாக நடந்தது. ஒரு தீர்வையும் எட்டமுடியவில்லை. கடைசியாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 4 சட்டமன்ற தொகுதி வழங்குங்கள் என்று கேட்டார். 


அதாவது 36 தொகுதிகள். ஆனால் திமுக தரப்போ, 2 வைத்து வாங்கிகொள்ளுங்கள் என்றது. அதாவது 18. காங்கிரஸ் தரப்போ , சரி, மூன்று வைத்து தாருங்கள் என்று மன்றாடியது. திமுக தரப்பு அசைந்து கொடுக்கவில்லை. அன்று மாலை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டது அனைத்து பத்திரிகையிலும் வந்த செய்தி. மறு நாள் காலையில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கி திமுக-காங்கிரஸ் கூட்டணி பேசு வார்த்தை முற்றுபெற்றது. 


எப்படி 18-இலிருந்து 25…? அந்த இரவு என்ன நடந்தது என்று திமுக காங்கிரஸ் உள்வட்டாரத்தில் பேசினோம், அதில் ஒரு மூத்த பிரமுகர் ,” தம்பி, கூட்டணி பத்திலாம் பேசாதீங்க..! காங்கிரசுக்கு 2 வச்சும் கொடுப்போம் 2 ½ வச்சும் கொடுப்போம், அதெல்லாம் தலைவர் முடீவுப் பண்ணுவாரு, ஆனால் நாளைக்குள்ள நல்ல முடிவு வரும்” என்றார். பதிலுக்கு நாங்கள், “ சரி, எத்தனை என்று சொல்ல வேண்டாம், டெல்லியில் யாராவது பேசுகிறார்களா என்று மட்டும் சொல்லுங்கள் என்றோம்,” , அதற்கு அவரோ , “ டெல்லியில சோனியா அம்மா கிட்ட கனிமா பேசிட்டாங்க , தலைவர் கிட்டயும் கனிமா பேசிட்டாங்க.. 


சோனியா அம்மா தலைவர் கிட்ட போன்ல பேசிட்டாங்க , சோனியா அம்மாவே சொல்லிட்டாங்க நீங்கதான் ஜெயிக்க போரீங்க ஆனால் பாஜக உங்களுக்கு எம்.எல்.ஏக்கள் கணக்கில் ஏதேனும் குடைச்சல் கொடுத்தால் நாங்கதான் வரணும், நல்லா முடிவா எடுப்பீங்கனு நம்புறேனு சொல்லிட்டாங்க, உடனே கனிமொழியும் தலைவருக்கு போன் பண்ணி “ அண்ணே 25 கொடுத்திடலாம் அண்ணே… நீங்க முடிவு பண்ணுங்க, சோனியா ஜியும் மனசு வருத்தப்பட வேண்டாம், ஒத்துக்கோங்க அண்ணே” என்றார். இந்த கனிமொழியின் கனிவுதான் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது. 

-அஜெய் வேலு