நகைச்சுவை நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களில் ஒன்று பேய் மாமா.

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் யோகிபாபு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் எம்.எஸ் பாஸ்கர், பிக் பாஸ் புகழ் ரேஷ்மா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் 

இந்த படம் ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்தி ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது சென்சார் ஆகியுள்ளதால் திரையரங்குகளில் தான் இந்த படம் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பா.ரஞ்சித் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. யோகிபாபு நடிப்பில் ட்ரிப் திரைப்படம் கடைசியாக வெளியானது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கிய இந்த படத்தில் சுனைனா, கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக அமைந்ததது. 

இது தவிர்த்து ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்கள் யோகிபாபு கைவசம் உள்ளது. தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.