தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளது. இன்று இவர் படங்களில் நடிக்காவிட்டாலும், இவரது படங்களை வைத்து மீம்ஸ்கள் பல வெளியாவதை பார்க்க முடிகிறது. திரைத்துறை சார்ந்த பல கலைஞர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர் கேப்டன் விஜய்காந்த். 

2010-ம் ஆண்டு விருத்தகிரி என்ற படத்தில் கடைசியாக ஹீரோவாக நடித்தார். அதனைத்தொடர்ந்து தன் மகனுக்காக சகாப்தம் எனும் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். பல நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருபவர், தற்போது ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்காக குரல் தந்துள்ளார். 

கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, 30 சதவீதம் ஓய்வூதியம் பிடிக்கப்படும் என ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள் 1640 பேருக்கு தமிழக அரசு தனி தனியே கடிதம் எழுதியிருக்கிறது. ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

2009 ஆண்டுக்கு முன் ஓய்வூதியம் பெற்ற மருத்துவர்களின் வயது தற்போது 70-லிருந்து 85 வயது வரை இருக்கும் என்றும் ஓய்வூதியத்திலிருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும். எனவே ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்திலிருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.