போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இயக்குனர் H வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படியிருக்க தல அஜித், சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த இயக்குனர் சச்சியுடன் கூட்டணி சேர விரும்பினார் என இணையத்தில் செய்தி வெளியானது. 

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தினை இயக்கியவர் தான் சச்சி. அது சூப்பர்ஹிட் ஆன நிலையில் அதை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அந்த படத்தினை பார்த்த அஜித், வியந்து இயக்குனரை பாராட்டினாராம். அவருடன் ஒரு படத்திற்காக கூட்டணி சேரவும் விரும்பியதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. 

இதுகுறித்து தல அஜித் தரப்பினை தொடர்பு கொண்ட போது, இச்செய்தி முற்றிலும் தவறு. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெளிவு படுத்தினர். மேலும் இணையத்தில் இதுபோன்ற செய்திகளை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்தனர். 

தற்போதைக்கு வலிமை படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் தல அஜித். ஷூட்டிங்கில் பங்கேற்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. கொரோனா நேரத்தில் அரசுக்கு உதவி செய்யும் நோக்கில், தமிழ்நாட்டில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை தெளிக்கும் பணியில் தக்ஷா குழுவுடன் இணைந்துள்ளார் அஜித்.