தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு. அத்ரங்கி ரே எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் D43 படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

பவர் பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கி வந்த திரைப்படம் நான் ருத்ரன். வரலாறு சிறப்புமிக்க இந்த படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல ஒரு பிளாஷ்பேக் பகுதியும் இப்படத்தில் உள்ளது என கூறப்படுகிறது. அந்த பகுதியை மட்டும் இயக்குனர் செல்வராகவனை இயக்க கேட்டுள்ளார் தனுஷ் என்றும் சமீபத்தில் செய்திகள் கிளம்பியது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது வரை வெளிவரவில்லை. 

தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் நாகர்ஜுனா, அதிதி ராவ் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். மேலும் எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் பற்றி கலாட்டா நேரலையில் பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும் போது தெலுங்கு சினிமாவிற்கு பாகுபலி செய்தது போல தமிழ் சினிமாவுக்கு தனுஷ் இயக்கும் வரலாற்று படம் இருக்கும் என பேசியுள்ளார். இந்த படம் பற்றி பெரிய அப்டேட் எதுவும் எனக்குத் தெரியாது, அதை துவங்க சில முயற்சிகள் நடந்து வருகிறது என்பது மட்டும் தெரியும். அந்த படம் முடிக்கப்பட்டால் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய திருப்பு முனையாக இருக்கும். 

தனுஷை நமக்கு ஒரு சிறந்த நடிகராக தான் தெரியும். எந்த கதாபாத்திரம் தந்தாலும் அதில் சிறப்பான நடிப்பை கொடுப்பார். அதே அளவு சிறந்த இயக்குனர் அவர். அதை ரசிகர்கள் வெகு விரைவில் பார்ப்பீர்கள். அவரிடம் இருந்து பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என கூறியுள்ளார் ஷான் ரோல்டன். 50 சதவீதம் முடிந்த இந்த படம் மீண்டும் துவங்கினால் நல்லது தானே. இதனால் மிகுந்த ஆவலில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.