நடிகர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன் வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் புகழ். விஜய் டிவியின் சிரிப்புடா , கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவையால் கவனத்தை ஈர்த்த புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை ரசிகர்கள் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்.

இதனை அடுத்து நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்த சிக்சர் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான புகழ் தொடர்ந்து சந்தானத்தின் சபாபதி, அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அஜித்குமாரின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை மற்றும் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் என புகழ் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே கோமாளியாக கலக்கிய புகழ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது.

கலகலப்பான நகைச்சுவை அட்வென்ச்சர் திரைப்படமாக தயாராகும் Mr.ஸூகீப்பர் திரைப்படத்தை இயக்குனர் J.சுரேஷ் எழுதி இயக்குகிறார். நடிகை ஷிரின் கஞ்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். J4 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது.