மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் படத்தில் நடிகர் விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்த நெல்சன், தற்போது சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். அவர் விஜய்யுடன் இணையும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை நடைப்பெற்றது. படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் பூஜா ஹெக்டேவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து தளபதி 65-ல் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். 

தளபதி 65 படத்தில் சண்டை இயக்குநர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்றுகிறார்கள். மெட்ராஸ், கபாலி, கைதி போன்ற படங்களில் பணியாற்றிய இவர்கள், கே.ஜி.எப் 1 படத்திலும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருந்தனர். அதோடு அந்தப் படத்தின் சிறப்பான சண்டைக் காட்சிக்காக தேசிய விருதையும் பெற்றனர். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால், தளபதி 65 படத்திலும் வில்லனாக நடிப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வலம் வருகின்றன. துப்பாக்கி கூட்டணி மீண்டும் திரையில் தோன்றப் போகிறது என இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, இந்த தகவலுக்கு தற்போது நடிகர் வித்யூத் ஜம்வால் விளக்கமளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ட்வீட்டுக்கு பதில் சொல்லியிருக்கும் அவர், நான் காத்திருக்கிறேன். அதோடு அவ்வாறு நடிக்க விரும்புகிறேன். ஆனால் இது தவறான செய்தி என்று தெரிவித்திருக்கிறார். துப்பாக்கி படத்தில் விஜய் - வித்யூத் ஜம்வால் சம்பந்தப்பட்ட அதிரடி காட்சிகள் மிகுந்த விறுவிறுப்புடன் படமாக்கப்பட்டிருக்கும். 

ஹீரோவா வில்லனா என்பது போல இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவது குறிப்பிடத்தக்கது.